தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எல். பாத்திமா றுக்ஸானா, தான் மாணவியாக கல்வி கற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலேயே விரிவுரையாளராகப் பதவியேற்று, தனது கல்விப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பாத்திமா றுக்ஸானா, 2016ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி, தகவல் தொழில்நுட்பத் துறையில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்துள்ளார்.
அதே துறையில் தனது கல்விப் பயணத்தை முன்னெடுத்த அவர், 2025ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்தில் அறிவியல் முதுகலைமாணிப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தகவல் தொடர்பான தொழில்நுட்பம் சிறப்பு கற்கை பிரிவில் முதன்மை மாணவியாகவும் காணப்படுவதுடன், குறித்த துறையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவியாகவும் திகழ்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் விரிவுரையாளராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
தான் ஒரு காலத்தில் மாணவியாக அமர்ந்து கல்வி கற்ற அதே துறையில், தற்போது விரிவுரையாளராக நின்று அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்பிக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது அவரது கல்விப் பயணத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
குறித்த விரிவுரையாளர் பதவிக்கு சம்மாந்துறைப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே நபர் தாமே என பாத்திமா றுக்ஸானா தெரிவித்துள்ளார்.
தனது நியமனம் தொடர்பில் பாத்திமா றுக்ஸானா தெரிவிக்கையில், “நான் கல்வி கற்ற அதே துறையில், அதுவும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. ஒரு மாணவியாகப் பெற்ற அனுபவங்களையும், எனது கல்விப் பயணத்தில் பெற்ற அறிவையும் அடுத்த தலைமுறை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதனைப் பார்க்கிறேன்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “இந்த நியமனம் எனது இலக்கின் முடிவு அல்ல. இன்னும் சிறப்பாகக் கற்று, கற்பித்து, ஆராய்ச்சி செய்து பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்களுக்கும் பங்களிக்க வேண்டிய புதிய பொறுப்பின் தொடக்கமாகவே இதனைப் பார்க்கிறேன்” என்றார்.
சம்மாந்துறை மாணவர்களுக்கு வழங்கும் செய்தி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்கள் சூழ்நிலைகள் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை; உங்கள் முயற்சியும் விடாமுயற்சியும் தான் உங்கள் எதிர்காலத்தை உருவாக்கும். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்று பல வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அதனைக் கற்று புதியவற்றை உருவாக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். ஆங்கிலம், நிரலாக்கம் (Programming), செயற்கை நுண்ணறிவு (AI), வலையமைப்பு (Networking) உள்ளிட்ட துறைகளில் தங்களது திறன்களை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, பெரிய கனவுகளுடன் மாணவர்கள் முன்னேற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தனது எதிர்கால இலக்கு தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “ஒரு சிறந்த விரிவுரையாளராக மட்டும் இருப்பது எனது இலக்கு அல்ல. மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்க்கக்கூடிய சிறந்த கல்வியாளராக இருப்பதே எனது நோக்கம். அதேவேளை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, புதிய தொழில்நுட்பங்களை கற்பித்தலில் கொண்டு வந்து, பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணிகளுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க விரும்புகிறேன். நீண்ட காலத்தில் PhD போன்ற உயர்கல்வியைத் தொடர்ந்து, சிறந்த கல்வியாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் வளர வேண்டும் என்பதே எனது இலக்கு” என்றார்.
சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் ஆரம்பித்த கல்விப் பயணத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்ததுடன், தான் கல்வி கற்ற அதே துறையில் தற்போது விரிவுரையாளராகப் பொறுப்பேற்றுள்ள பாத்திமா றுக்ஸானாவின் பயணம், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கல்விப் பயணமாக அமைந்துள்ளது.
தான் ஒரு காலத்தில் மாணவியாக இருந்த அதே பல்கலைக்கழகத்தில், அதே துறையில் இன்று மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலைக்கு உயர்ந்திருப்பது, கல்வியின் மூலம் இலக்குகளை நோக்கி முன்னேற முடியும் என்பதற்கான குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.