சௌவியதாசன்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை (S) பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் “கிழக்கின் கலைச்சங்கமம்” (EASTERN ART FUSION) கலை, கலாசார விழாவானது வரும் அக்டோபர் 06 முதல் 10 ஆம் திகதி வரை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி. மேனகா புவிக்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் நாள்தோறும் பிற்பகல் 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறவுள்ளன.
5 நாட்கள் நடைபெறும் பிரத்தியேக கலை நிகழ்ச்சிகளின் விபரம்:
1ஆம் நாள் (2026.10.06 – செவ்வாய்க்கிழமை):
தமிழ் மற்றும் முஸ்லிம் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறும். இதில் பரதநாட்டியம், காவடி, கும்மி நடனம், ஒயிலாட்டம், பாம்பு நடனம், பொல்லடி, கஸீதா, றபான், கம்பு வீச்சு மற்றும் சீனடி போன்ற பல பாரம்பரிய கலை வடிவங்கள் மேடையேற்றப்படவுள்ளன.
2ஆம் நாள் (2026.10.07 – புதன்கிழமை):
ஆண்கள் குழுவினர் மற்றும் பெண்கள் குழுவினர் பங்கேற்கும் சுவாரஸ்யமான இரண்டு பட்டிமன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
3ஆம் நாள் (2026.10.08 – வியாழக்கிழமை):
மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை மற்றும் மிமிகிரி (Mimicry) சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
4ஆம் நாள் (2026.10.09 – வெள்ளிக்கிழமை):
நகைச்சுவையுடன் கூடிய கிராமிய மற்றும் நாட்டார் பாடல்களின் கலை விருந்து நடைபெறும்.
5ஆம் நாள் (2026.10.10 – சனிக்கிழமை):
சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பாடல்கள், பக்திப் பாடல்கள் மற்றும் ஏனைய இசைப் பாடல்கள் அடங்கிய ‘பாடல்களின் சங்கமம்’ நிகழ்வுடன் விழா இனிதே நிறைவுறும்.
கிழக்கு மாகாணத்தின் கலை, கலாசாரப் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் இந்நிகழ்வில் பொதுமக்கள், கலை ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அன்போடு அழைப்பு விடுக்கின்றது.
