கொழும்பு: கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு கட்டமாக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (05) சவுதி அரேபியாவுக்குப் பயணமாகவுள்ளது.
குறித்த குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சவுதி அரேபியாவைச் சென்றடையும் இக்குழுவினர், அங்குள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சந்தித்து, அனோஜனின் தண்டனையை மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.
இதேவேளை, அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு அரசாங்கம் உரிய தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, ராமஞ்ஞ மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாய ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மாற்றக் கோரும் மேன்முறையீட்டை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சவுதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், அந்நாட்டு அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியில் தொடர்புகளைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பாக அனோஜன் சிவராசாவுக்கு சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பத்தில் ஐந்து வருட சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, அனோஜன் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா தொழில் நிமித்தம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.