October 3, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இறக்காமம் பிரதேச செயலகத்தின் பாரம்பரியக் கலைநிகழ்வும் நூலக நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வும் – 2026

இறக்காமம் பிரதேச செயலகத்தின் பாரம்பரியக் கலைநிகழ்வும் நூலக நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வும் – 2026

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் ‘வத்ஸர பியவர’ வேலைத்திட்டத்தின் கீழ், பாரம்பரிய மற்றும் கிராமியக் கலைகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரியக் கலைநிகழ்வும் நூலக நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வும் 2026.09.30 புதன்கிழமை இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாரம்பரியக் கலை வடிவங்களின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதுடன், அழிந்துவரும் கிராமியக் கலை மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை எதிர்கால சந்ததியினரிடம் கொண்டுசெல்லும் நோக்கிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான்(நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.நஹ்பீசா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். றஸாக், மேலதிக மாவட்ட பதிவாளர் எஸ்.எம்.சுஜாத், நூலக நிறுவனத்தின் கள ஆய்வளர்களான ஏ. அனோஜன், பி. ஜோன் டிலக்‌ஷன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், கலாசார உத்தியோகத்தர் ஏ. டப்யூ. நாளிகா தமயந்தி, இறக்காமம் பிரதேச கலாசார அதிகாரசபையின் உப தலைவரும் உளவளத்துணை உத்தியோகத்தருமான ஏ.எச். றகீப், பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவரும் ஓய்வு பெற்ற கிராமசேவை அதிகாரியுமான யு.எல். யாசீன் பாவா உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

குறிப்பாக, கிராமிய மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ள பொல்லடி, சீனடி மற்றும் வாள் வீச்சு போன்ற பாரம்பரியக் கலை வடிவங்களுக்கு புத்துயிரளிக்கும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, பொல்லடிக் கலைக்கான பயிற்சிப் பட்டறையில் பயிற்சி வழங்கிய வளவாளர்களான கே.எல். அலியார் மற்றும் எம்.எஸ். சித்தீக்(சமூகூன்) ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி, உதவிப் பிரதேச செயலாளர் அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கபட்டன.

அதேவேளை, நூலகம் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் கிழக்கிலங்கையின் நாட்டார்பாடல்கள் செயற்றிட்டப் பணிக்குப் பங்காற்றிய இறக்காமத்தின் சிரேஷ்ட கலைஞர்களான கலாபூசணம் கவின்கலைப் பாடகர் எச்.எல். அப்துல் ஸலாம், அண்ணாவியர் கலை முதுசம் எம்.எஸ். சித்தீக், கட்டுப் பாடகர் எம்.ஏ. ஆதம் லெப்பை மற்றும் கவிஞர் எஸ்.எல். சுபைதீன் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, வழங்கப்பட்ட நேரத்திற்குள் நூலக நிறுவனம் பற்றிய மிகச் சுருக்கமான தெளிவுபடுத்தல் நூலக நிறுவனத்தின் கள ஆய்வளரான
பி. ஜோன் டிலக்‌ஷன் என்பவரால் வழங்கப்பட்டது. அத்தோடு நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

பொல்லடி பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று பயிற்சி பெற்ற கமு/சது அல்-அஷ்ரப் மத்திய கல்லூரி மற்றும் கமு/சது அமீர் அலிபுரம் வித்தியாலய மாணவர்களுக்கு அவர்களின் பங்கேற்பையும் திறமையையும் பாராட்டும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாரம்பரிய கலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் சீனடி மற்றும் வாள் வீச்சுக் கலைஞர்களான எஸ்.ரி. நப்றீல், எச்.ஏ. தாஹிர், எ.எல். உமர், எ.எச்.எம். அசாம் மற்றும் எஸ். ஹாரூன் ஆகியோரும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

பொல்லடி அரங்கேற்றத்தின் போது பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், பாரம்பரியக் கலை வடிவங்களின் சிறப்பையும் அழகியலையும் பார்வையாளர்களுக்கு எடுத்துக்காட்டினர். மாணவர்களின் ஆர்வமிக்க பங்கேற்பு, பாரம்பரியக் கலைகளை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்வதற்கான சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.

கிராமியக் கலைகள் என்பது வெறுமனே பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்வுகள் அல்ல; அவை ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், மரபு, ஒற்றுமை மற்றும் சமூக நினைவுகளைப் பிரதிபலிக்கும் பண்பாட்டுச் சொத்துகளாகும். எனவே, இத்தகைய கலை வடிவங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றில் தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட கலைஞர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதற்கும் இளைய தலைமுறையினருக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

கலைஞர்களின் அனுபவமும் மாணவர்களின் ஆர்வமும் ஒன்றிணைந்த இந்நிகழ்வு, இறக்காமம் பிரதேசத்தின் பாரம்பரிய கலைப் பண்பாட்டை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான கலாசாரப் பாலமாக அமைந்தது.

பாரம்பரிய கலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், கிராமியக் கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும், எதிர்காலத்தில் இவ்வாறான பயிற்சிப் பட்டறைகள், அரங்கேற்றங்கள் மற்றும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *