அரச சேவைக்கு ஆட்சேர்ப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை – குழந்தைகளுடன் பணிபுரிவோருக்கு குற்றச்சாட்டு இல்லையென சான்றிதழ்!
பொதுச் சேவை ஆட்சேர்ப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புபட்டு பணியாற்றும் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்படுபவர்கள், தங்களுக்கு எதிராக குழந்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ், இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குழந்தைகளுடன் தொடர்புபடும் பணிகளுக்கு, குழந்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இல்லாத நபர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்டுள்ள நடைமுறையின் கீழ், குறித்த சான்றிதழ் பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களினால் வழங்கப்பட வேண்டும்.
மேலும், இந்த நடைமுறை ஏற்கனவே அரச சேவையில் பணியாற்றி வருபவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் தமது சேவை இடைவேளைகள் மற்றும் சம்பள உயர்வுகளின் போது குறித்த சான்றிதழை மீண்டும் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் அவர்கள் குழந்தைகள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்படும்.
“அரச சேவையில் இணையும் போது, குறிப்பாக குழந்தைகளுடன் தொடர்புபடும் பணிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாதவர்கள் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். இதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக முன்னெடுத்து வருகிறோம்.
அதேபோன்று, ஏற்கனவே அரச சேவையில் இருப்பவர்களும் தமது சேவைக்கால இடைவேளைகள் மற்றும் சம்பள உயர்வுகளின் போது இந்தச் சான்றிதழை தொடர்ச்சியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். குறித்த காலப்பகுதியில் அவர்கள் குழந்தைகள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக இல்லையென்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். எதிர்காலத்தில் ஒரு நாடாக நாம் முன்னெடுக்க வேண்டிய அவசியமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்” என அமைச்சர் சரோஜா போல் ராஜ் தெரிவித்தார்.