பாலமுனை வாஹிட்டின் “தொலைந்து போன முகவரி” நூல் வெளியீட்டு விழா!
(அஹமட்)
கவிஞர் பாலமுனை வாஹிட் எழுதிய “தொலைந்து போன முகவரி” கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (12) காலை 9.00 மணிக்கு பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
கலாபூசணம் பாவேந்தல் பாலமுனை பாருக் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ஹாஜ் றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் விசேட அதிதியாகவும், பொறியியலாளர் கவிஞர் தம்பி லெவ்வை இஸ்மாயில் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் இலக்கிய அதிதியாகவும், பிரதேச சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சீல் மற்றும் சந்தக்கவிஞர் கிண்ணியா அமீர் அலி ஆகியோர் நட்சத்திர அதிதிகளாகவும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியவாதிகள், கவிஞர்கள், கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
