தகவல் – குலசிங்கம் கிலசன் -இளஞ்சைவ பண்டிதர்
முருக பக்தரான யோகா என்பவர் என்னிடம் உரைத்த தில்லை மண்டூர் வேலவனின் அற்புதக்காட்சிகளின் எழுத்துவடிவம் இதோ.
மண்டூர் முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, யாழ்ப்பாணம் மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் யாத்திரீகர்களாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அவர்கள் ஆலயத்தில் தங்கியிருந்த இரவு வேளையில் பல வியக்கத்தக்க அற்புத நிகழ்வுகள் இடம்பெற்றதாகக் கூறுகின்றனர்.
ஆலயத்தின் எளிமையான தோற்றத்தையும் சுற்றுச்சூழலையும் பார்த்து இங்கேயெல்லாம் முருகன் இருப்பானா என எண்ணிக்கொண்டு, இந்த ஆலயத்தில் அப்படியென்ன தெய்வீக சக்தி இருக்கிறது? என்ற கேள்விகள் அவரது மனதில் எழுந்த நிலையில், அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் முருகப்பெருமான் தோன்றி அருளியதாக அவர்கள் விவரிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
இரவு 11 மணியளவில் ஆலயத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்த நரைமுடியுடன்கூடிய பெரியவர் ஒருவர் உனது சந்தேகங்களுக்கெல்லாம் காலை வேளையில் பூசை நடப்பதற்கு முன்பு பதில் கிடைக்கும் என்று உரைத்ததாகவும், பின்பு அந்த இடத்திற்குச் சென்றபோது அந்த முதியவரை அவ்விடத்தில் மட்டுமல்லாது ஆலயத்தைச் சுற்றிய பகுதிகளிலும் காணமுடியவில்லையாம்.
ஆலயத்தின் முன்னுள்ள வாவிக்கரையில் அதிகாலை 3 மணியளவில் ஒளிப்பிளப்பு போன்ற காட்சி 3 தடவைகள் தோன்றி மறைந்ததோடு, வேல்கள் உள்ள தில்லை மரத்து அடியிலே ஆற்றங்கரையை நோக்கியதாக கறுப்பு நிற கல்லின் பின்னே தங்கநிற வேல் இருக்கக்கூடிய காட்சியும் அந்த கல்லைத் தொட்டு வணங்கியதும் அவருடைய உடல் சிலிர்த்து போனதும் அவர்களை இன்னும் பூரிப்படையச் செய்துள்ளது.
காலைநேரப் பூசையின் போது கப்புகனாரோ அல்லது அங்குள்ள வேறு அடியவர்களோதான் தம்மோடு பேசிய முதியவராக இருக்கவேண்டுமென சந்தேகித்து அங்கிருந்த சகலரையும் உற்றுநோக்கிய போதிலும் தம்மிடம் பேசிய பெரியவர் அந்த ஆலயத்திலேயே இல்லை என்பதையும் உணர்ந்துகொண்டார்கள்.
ஆடம்பரமில்லா எளிமையையும், தூய்மையையும் விரும்பும் முருகன் மண்டூரிலே இப்போதும் அருளுருவாய் ஜொலிக்கிறார் அந்த காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என மனந்திறந்து தனது உள்ளத்தில் தோன்றியவற்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார் அந்த அடியவர். அவற்றைக் கேட்ட பொழுதிலேயே எனது உடல் சிலிர்த்துப்போனது.
இன்று நேரில் சென்று பார்த்தேன் அவர் தங்கநிற வேலைக் கண்ட இடத்தில் கருங்கல் மட்டுமே உண்டு. மறுபுறத்தில்தான் பல வேல்கள் வழக்கமாக உள்ளவை உண்டு. அவர் கண்ட காட்சிகள் யாவும் சந்தேகமின்றி முருகனின் அற்புதங்களே. உண்மைகளைப் பகிர வேண்டும் முருகனருள் எல்லோர்க்கும் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்திலே இதனைப் பகிர்கிறேன்.
மண்டூர் முருகனின் அருளும் மகிமையும் மனதில் சந்தேகம் கொண்ட பக்தர்களின் அனுபவத்தில் வெளிப்பட்ட ஓர் ஆன்மீக அதிசயம்.
குலசிங்கம் கிலசன்
இளஞ்சைவ பண்டிதர்


