( வி.ரி. சகாதேவராஜா)
இந்துக்கள் கொண்டாடும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் நாளை (24) ஆகும்.
திருக்கார்த்திகை தீபத் திருநாள் நாளை நவம்பர் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.
சிவபெருமான் ஜோதி வடிவமாகக் காட்சியளித்த நாளாகவும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப்பெருமானுக்கு உகந்த திருநாளாகவும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி நாளை திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னர் வீடுகளில் 27 அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
சிவபெருமான் வழிபாடு
திருக்கார்த்திகை தினத்தன்று வீடுகளைச் சுத்தம் செய்து, வாசலிலும் பூஜை அறையிலும் கோலமிட்டு சிவபெருமானுக்கு உரிய பூஜைகளை மேற்கொள்ளலாம். விளக்குகள் மற்றும் செவ்வாழை மலர்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யலாம்.
மாலை வேளையில் மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சுத் திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். பூஜை அறை, நிலைவாசல், சமையலறை, முற்றம் உள்ளிட்ட இடங்களில் வரிசையாக தீபங்களை ஏற்றி வைப்பது சிறப்பாகும்.
மேலும் “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிப்பதுடன் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவபெருமானைப் போற்றும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.
முருகப்பெருமான் வழிபாடு
திருக்கார்த்திகை நாளில் காலையில் நீராடி, முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்து வழிபடலாம்.
முருகன் சன்னதியிலோ அல்லது வீட்டுப் பூஜை அறையிலோ ஆறு அகல் விளக்குகளை ஏற்றி, “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சிறப்புடையதாகும்.
நைவேத்தியமாக பொரி உருண்டை, அவல் பொரி, அப்பம், பயசம், கற்கண்டு, பால் உள்ளிட்டவற்றைப் படைத்து வழிபடலாம்.
திருக்கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபங்களை ஏற்றி, சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை வழிபட்டு அருள், அமைதி, செழிப்பு நிறைந்த வாழ்வைப் பெறுவோம்.