September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது;மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு

பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது;மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு

கதிர்காமம் பாதயாத்திரையின் 41ஆம் நாள்: பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது; மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு

செல்வி வினாயகமூர்த்தி

வரலாற்றுச்சிறப்பு மிக்க கதிர்காமம் நோக்கிய வருடாந்த பாதயாத்திரையின் 41ஆம் நாளான இன்று (30) செவ்வாய்கிழமை பாதயாத்திரை குழுவினர் அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் மகா தேவஸ்தானத்தை வந்தடைந்தனர். வருகை தந்த பக்தர்களுக்கும், அவர்களுடன் பயணித்துவரும் ‘சுப்பிரமணியன்’ எனும் நாய்க்கும் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்ததுடன், உபசரிப்புகளும் வழங்கப்பட்டன.

கடந்த 2026 மே 23ஆம் தேதி ஆரம்பமான இப்பாதயாத்திரை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைக் கடந்து தற்போது அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றை வந்தடைந்துள்ளது.

பாதயாத்திரை குழுவின் தலைவரான வேல்சாமி சிங்கராஜா ஜெயராஜ் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊற்றங்கரையில் இருந்து பாதயாத்திரையுடன் இணைந்து சுமார் 470 கிலோமீற்றர் தூரம் பயணித்துவரும் ‘சுப்பிரமணியன்’ எனும் நாயின் பாதுகாப்பிற்காக கதிர்காமம் காட்டுப்பாதையில் இறங்கும்போது அதன் பாதுகாப்பு கருதி மிருகவதைத் தடுப்பு அமைப்பின் தலைமை அதிகாரி தேவையான ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்றார்.

மேலும், கதிர்காமத்தில் ஏழுமலையை ஏறி வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர், பாதயாத்திரை குழுவில் உள்ள ஒருவர் ‘சுப்பிரமணியன்’ நாயை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று பராமரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பாதயாத்திரை குழுவில் 100-க்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த முருக பக்தர்கள் பங்கேற்றிருந்ததுடன், சிறுவர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் மகா தேவஸ்தானத்தில் வருகை தந்த பக்தர்கள் விசேட பூஜை மற்றும் வழிபாடுகளில் பக்திபூர்வமாக ஈடுபட்டதுடன், ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தை தரிசித்துவிட்டு இன்று மாலை கதிர்காமம் நோக்கிய தமது ஆன்மிகப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றனர்.