September 15, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > ஈஸ்டர் தாக்குதல் சதியில் சுரேஷ் சலே தொடர்பு: போதுமான ஆதாரங்கள் உள்ளன – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

ஈஸ்டர் தாக்குதல் சதியில் சுரேஷ் சலே தொடர்பு: போதுமான ஆதாரங்கள் உள்ளன – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முன்னாள் இராணுவ மற்றும் அரச புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்புடையிருக்கலாம் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, தாக்குதலுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்pu பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் தொடர்பான முக்கிய தகவல்களைச் சேகரிக்க நான்கு முஸ்லிம் நபர்கள் அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வழிபாட்டாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் தாக்குதலைத் திட்டமிட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பான தாக்குதல் எச்சரிக்கைகள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும் அவை புறக்கணிக்கப்பட்டதாகவும், அந்தத் தகவல்களை வழங்கிய தகவலாளர் பின்னர் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய தொலைக்காட்சி சேனல் 4-இல் வெளியிடப்பட்ட அசாத் மௌலானாவின் தகவல்களும் தற்போதைய விசாரணைகளில் கிடைத்துள்ள தகவல்களுடன் ஒத்துப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இக்குற்றச்சாட்டுகள் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகும்.

அவருக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என்றும், பிரதான சந்தேகநபருக்குரிய அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டதுடன், சட்டத்தரணிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், நீதிவான் அவரது உடல்நிலை தொடர்பாக நேரில் பார்வையிட்டபோதும் எந்தவிதமான மனிதாபிமானமற்ற நடத்தையையும் குறித்து சுரேஷ் சலே முறையிடவில்லை என்றும், வேறு எந்த அதிகாரிகளிடமும் அதுபோன்ற புகார் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தனது மடிக்கணினி மற்றும் கைப்பேசியின் கடவுச்சொற்களை இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் வழங்க மறுத்து, விசாரணைகளுக்குத் தடையாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவொரு போராட்டம் அல்லது சத்தியாகிரகத்தாலும் நிறுத்தப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.