September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இலங்கை ஏற்றுமதி வருமானம்: 4 மாதங்களில் $5.7 பில்லியனை கடந்தது

இலங்கை ஏற்றுமதி வருமானம்: 4 மாதங்களில் $5.7 பில்லியனை கடந்தது

உலகளாவிய ரீதியில் நிலவும் சவாலான பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் (பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்களாக) 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.3% வளர்ச்சியாகும்.

குறிப்பாக 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,380.93 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன். இது கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விட 6% வளர்ச்சியாகும் என இலங்கைச் சுங்கத் திணைக்களம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ஏற்றுமதித் துறை தனது உறுதித்தன்மையை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பொருட்கள் ஏற்றுமதி மூலம் 1,063.77 மில்லியன் டொலர்களும், சேவைத் துறை ஏற்றுமதி மூலம் மதிப்பிடப்பட்ட 317.16 மில்லியன் டொலர்களும் ஏப்ரல் மாதத்தில் வருமானமாகப் கிடைத்துள்ளன.

நாட்டின் பொருளாதார மீட்சிப் பாதையில் சேவைத் துறையின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2026 ஏப்ரல் மாதத்தில் தேங்காய் சார்ந்த பொருட்கள் 23.49% வருமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. இதில் குறிப்பாக ‘செயற்படுத்தப்பட்ட கரி’ (Activated Carbon) ஏற்றுமதி 58.32% அதிகரித்துள்ளது.

ஏனைய துறைகளின் வளர்ச்சி வருமாறு:

  • உணவு மற்றும் பானங்கள் துறை: 45.17% வளர்ச்சி.
  • மின்சார மற்றும் இலத்திரனியல் பாகங்கள்: 41.51% வளர்ச்சி.
  • கடல் உணவு ஏற்றுமதி: 13.07% வளர்ச்சி.
  • கறுவா ஏற்றுமதி: 58.06% அபார வளர்ச்சி.

சவால்களை எதிர்கொள்ளும் துறைகள்:
சாதகமான வளர்ச்சிக்கு மத்தியிலும், சில பிரதான துறைகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஆடை மற்றும் புடவைத் துறை வருமானம் 4.88% இனால் வீழ்ச்சியடைந்து 346.67 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அதேபோல், தேயிலை ஏற்றுமதி வருமானமும் 6.82% இனால் குறைவடைந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் நிலவும் குறைந்த கேள்வியே இந்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.

பிரதான ஏற்றுமதிச் சந்தைகள்:
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது (மொத்த ஏற்றுமதியில் சுமார் 22%). அதனைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது பெரிய சந்தையாகத் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், பிரித்தானியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

நன்றி – தினகரன்