பாறுக் ஷிஹான்
பெண் காதி நீதவான் நியமனம் மற்றும் மணப்பெண் கையொப்பம் மாத்திரம் போதும் என்ற திருத்தங்கள் இஸ்லாமிய வரம்புகளுக்கு முரணானவை- மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
சட்டத்தைத் திருத்த முயன்ற கடந்த கால ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமையைத் தற்போதைய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கை
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண் காதி நீதவான்களை நியமிப்பது மற்றும் மணப்பெண்ணின் கையொப்பம் மாத்திரம் போதும் எனத் திருத்தங்களைக் கொண்டுவருவது ஆகிய முயற்சிகளை இலங்கை உலமா கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் முப்தி வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1951ஆம் ஆண்டு இறுதியாகத் திருத்தப்பட்டு இன்றுவரை நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டமானது, இந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு எமது மூதாதையர்கள் பெற்றுத் தந்த மகத்தான உரிமையாகும். ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே இச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று, அதற்காகக் குரல் எழுப்பியவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
இச்சட்டத்தில் உள்ள விடயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல், அதில் குழப்பத்தை ஏற்படுத்தி அதனை இல்லாமலாக்க முயற்சிப்பது ஆரோக்கியமான செயலல்ல. இச்சட்ட உரிமையைப் பாதுகாப்பதே எமக்கு முன்னுள்ள பிரதான சவாலாகும்.
இஸ்லாத்திலோ அல்லது முஸ்லிம் விவாகச் சட்டத்திலோ பெண்கள் 12 வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்று எங்கும் கட்டாயப்படுத்தப்படவில்லை. பருவமடைந்த பின்னர், மணமக்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களின் விருப்பத்துடன் திருமணம் செய்யலாம் என்பதே இஸ்லாமிய சட்டமாகும்.
தற்போதைய சமூகச் சூழலில் 12 வயதில் யாருக்கும் திருமணம் செய்து வைக்கப்படுவதில்லை; மாறாக, 30 வயதைத் தாண்டியும் திருமணமாகாத முஸ்லிம் பெண்களே அதிகளவில் உள்ளனர். திருமணத்திற்கு அப்பாலான உறவுகளால் சிறுவயதில் ஏற்படும் சமூக அவலங்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பையே இஸ்லாம் வழங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்க பெண்கள் இருந்தபோதிலும், எவரும் காதி நீதவானாக நியமிக்கப்படவில்லை. காதியாக நியமிக்கப்படுபவர் பள்ளிவாசலில் மக்களுக்குத் தொழுகை நடத்தும் ‘இமாம்’ தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய மரபாகும்.
மேலும், ஒரு பெண்ணுக்கு ‘வொலி’ (பாதுகாவலர்) இல்லாத சந்தர்ப்பத்தில் காதியே ‘வொலி’யாக இருந்து திருமணத்தை நடத்தி வைப்பார். இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண் ‘வொலி’யாகச் செயற்பட முடியாது என்பதால், பெண்களை காதி நீதவான்களாக நியமிப்பது இஸ்லாத்திற்கு முரணானதாகும். எனினும், ஆண் காதி நீதவான்களின் ஆலோசகர்களாகவோ அல்லது உதவியாளர்களாகவோ பெண்களை நியமிப்பதில் உலமா கட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அத்துடன், காதிகளாக நியமிக்கப்படுபவர்கள் பட்டதாரி மௌலவிகளாக இருக்க வேண்டும் என்பதே எமது தொடர்ச்சியான வலியுறுத்தலாகும்.
மணப்பெண்ணின் பாதுகாவலரின் கையொப்பமின்றி, மணப்பெண்ணின் கையொப்பம் மாத்திரம் போதும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டால், பெற்றோரை விட்டுவிட்டுத் தன்னிச்சையாகச் சென்று திருமணச் சான்றிதழில் ஒப்பமிடும் போக்கு அதிகரிக்கும். நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில், இத்தகைய திருத்தம் பாரிய சமூக அவலங்களை உருவாக்கும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் திருமணச் சட்டத்தைத் திருத்த முயன்ற மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்ந்ததையும், அச்சட்டத்தை இல்லாமலாக்க முயற்சித்த கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை விட்டு வெளியேறியதையும், ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளை இழந்து நிற்பதையும் தற்போதைய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, முஸ்லிம்களின் மத விவகாரங்களுடன் தொடர்புடைய இச்சட்டத்தில் கைவைத்து இறைவனின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என இலங்கை உலமா கட்சி கேட்டுக்கொள்கின்றது