November 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பன்மைத்துவச் சமூகத்தில் மிதவாதமும் அறிவுத் தளமும்: கொழும்புக் கல்விசார் கருத்தரங்கின் தாக்கமும் எதிர்காலப் பிரதிபலிப்பும்

பன்மைத்துவச் சமூகத்தில் மிதவாதமும் அறிவுத் தளமும்: கொழும்புக் கல்விசார் கருத்தரங்கின் தாக்கமும் எதிர்காலப் பிரதிபலிப்பும்

(எழுத்து : வை.அறபாத்)

பல இனங்களும் பல மதங்களும் ஒன்றாக வாழும் இலங்கை போன்றதொரு பன்மைத்துவக் குடியரசில், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் பரஸ்பர மரியாதையுமே தேசத்தின் நிம்மதியையும் நிலைத்தன்மையையும் தீர்மானிக்கின்றன. இத்தகைய பல்கலாசாரச் சூழலில், முஸ்லிம் சமூகம் தமது சமய விழுமியங்களைக் காத்துக்கொண்டு, சக சமூகங்களுடன் இயைந்தும் இணங்கியும் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அந்த வகையில், நடுநிலைச் சிந்தனையையும் மிதவாத அணுகுமுறையையும் பிரதான மையமாகக் கொண்டு கொழும்பு 07, டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் கடந்த நவம்பர் 18 அன்று நடைபெற்ற 4-வது கல்விசார் கருத்தரங்கு, சிந்தனைத் தெளிவையும் அறிவுப் பகிர்வையும் முன்னிறுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. தீவிரப் போக்குகளும் மதவாத மோதல்களும் உலகின் பல பகுதிகளில் பதற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், சமயக் கல்வியிலும் அறிவுப் பரப்பலிலும் நிதானத்தையும் சமநிலையையும் பேணுவது மிக அவசியமானதாகும்.

இலங்கையின் பன்மைத்துவ யதார்த்தத்தில், சமய அறிஞர்கள், மார்க்கப் போதகர்கள், அரபு மொழி அறிஞர்கள், விரிவுரையாளர்கள், மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடுவது சமூகத்தில் நேர்மறையான சிந்தனைகளை விதைக்க உதவும். குறிப்பாக, மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோரின் பங்கேற்பு, அரச நிர்வாகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான ஆக்கபூர்வமான உரையாடலை வலுப்படுத்தி, சமூக விவகாரங்களைப் பக்குவமாக அணுகுவதற்கான சூழலை உருவாக்குகிறது.

இத்தகைய அறிவுசார் முயற்சிகளில் சவூதி அரேபியாவின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் கவனிக்கத்தக்கது. சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சும், இலங்கை முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த இக்கருத்தரங்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசாரத் தொடர்புகளுக்குப் புதிய வலு சேர்த்துள்ளது. குறிப்பாக, இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்தின் பதில் தூதுவர் யாஸிர் பின் அப்துர் ரஹ்மான் அல்ஹாஸிமியின் நேரடி மேற்பார்வையும், சவூதியிலிருந்து வருகை தந்த அறிஞர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்களிப்பும், கள ஒருங்கிணைப்பாளர்களின் உழைப்பும் இந்நிகழ்வின் தரத்தை உயர்த்தியதோடு, சமயக் கல்வித் துறையில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தன.

இக்கருத்தரங்கின் பலாபலனும் சமூகப் பிரதிபலிப்பும் வெறும் அரங்க உரைகளோடு நின்றுவிடாமல், அன்றாட வாழ்விலும் சமூக நடத்தைகளிலும் வெளிப்பட வேண்டும். அறிஞர்களும் கல்வியாளர்களும் பெறும் தெளிவான வழிகாட்டல்கள், பாடசாலைகள் மற்றும் மத்ரஸாக்களின் கற்பித்தல் முறைகளிலும், பொதுவெளி உரைகளிலும் மிதவாதப் பண்பாகப் பிரதிபலிக்கும்போது, சகிப்புத்தன்மை கொண்ட சூழல் உருவாகும். இதன் விளைவாக, பிற சமூகங்களுடனான நம்பிக்கை வலுப்பெறும்; தவறான கணிப்புகள் குறையும்; தேசிய ஒருமைப்பாடும் அமைதியான சகவாழ்வும் இலங்கையில் மேலும் உறுதிப்படும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *