– கிரிஷாந் மகாதேவன் –
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது மாணவன் ரிஷாந்தன் அபிஷதன் ஆங்கிலத்தில் எழுதிய இரு நூல்கள் கடந்த (21) அன்று அவரது இல்லத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டன.
அக்கரைப்பற்று ‘பெபிள்ஸ் அகாடமி’யில் (Pebbles Academy) கல்வி பயின்று வரும் மாணவன் ரி.அபிஷதன், தனது பிறந்தநாளையொட்டி பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்நூல்களை வெளியிட்டார். இந்நிகழ்வை ஆசிரியர்கள், கல்விச் சமூகத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாணவன் ரிஷாந்தன் அபிஷதன் தனியாக எழுதிய “Moral Stories For Children” என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும், முகமது கிதாஸ் நிஹாலுடன் இணைந்து எழுதிய “Shanpaw’s Journey” என்ற நூலும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.
மிக இளம் வயதிலேயே ஆங்கிலப் புலமையுடன் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தி, இரு நூல்களை உருவாக்கியுள்ள இச்சிறுவனின் முயற்சி ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
திறமையை வெளிப்படுத்திய மாணவனுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.






