( வி.ரி.சகாதேவராஜா)
தமிழின விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது வருட நினைவு தின ஊர்திக்கு காரைதீவில் நினைவஞ்சலி இன்று (16) புதன்கிழமை மாலை நிகழ்த்தப்பட்டது .
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் காரைதீவு பிரதேச முன்னாள் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இவ் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த இந்த ஊர்தி ஊர்வலம் இன்று (16) புதன் கிழமை காலை பொத்துவிலில் இருந்து அம்பாறைமாவட்ட கிராமங்கள் ஊடாக நீலாவணையை சென்று அடைந்தது.
அதன்போது காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் வைத்து முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் நினைவு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் த.மோகனதாஸ் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ஊர்தியுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துஷாந்தன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சுரேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.









