September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > 27 ஆண்டுகால கல்விச் சேவையின் தொடர்ச்சியாக அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் புதிய அதிபராக தங்கராசா இராசநாதன்.

27 ஆண்டுகால கல்விச் சேவையின் தொடர்ச்சியாக அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் புதிய அதிபராக தங்கராசா இராசநாதன்.

(செல்வி வினாயகமூர்த்தி)

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கமு/திகோ இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக தங்கராசா இராசநாதன் 07.09.2026 அன்று கடமையேற்றுள்ள நிலையில், அவரை வரவேற்கும் நிகழ்வு இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

1998.01.26ஆம் திகதி கமு/திகோ கண்ணகி வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்ற தங்கராசா இராசநாதன், பின்னர் கமு/திகோ/ திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் மகாவித்தியாலயத்திலும், கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

2016ஆம் ஆண்டு அதிபர் சேவைக்கான பரீட்சையில் சித்தியடைந்து பிரதி அதிபராகக் கடமையாற்றிய இவர், 2019ஆம் ஆண்டு கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் அதிபராக நியமிக்கப்பட்டு ஆறு வருடங்களுக்கு மேலாக அப்பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பை முன்னெடுத்தார்.

தொடர்ந்து, 2025.07.23ஆம் திகதி மீண்டும் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் அதிபராகக் கடமையேற்றார். இந்நிலையில், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட இடமாற்றத்தின் மூலம், அக்கரைப்பற்று கமு/திகோ இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தின் அதிபராக 07.09.2026 அன்று கடமையேற்றுள்ளார்.

புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வில், இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயம் கடந்து வந்துள்ள வரலாற்றுப் பாதை மற்றும் கல்வித்துறையில் அது ஆற்றிவரும் பங்களிப்புகள் தொடர்பில் அதிதிகளால் நினைவுகூரப்பட்டதுடன், புதிய அதிபருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன. இதன்போது, வருகை தந்த அதிதிகளிடம் அதிபர் தங்கராசா இராசநாதன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் வலய ஆரம்பபிரிவுக்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு அம்ஜித்கான் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ. செல்வம், அக்கரைப்பற்று இராமகிருஷ்ண தேசிய பாடசாலை அதிபர் டேவிட் அமிர்தலிங்கம், ஓய்வுபெற்ற முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரிகள், உள்ளிட்ட முன்னாள் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அதிபர் தங்கராசா இராசநாதனின் பாடசாலை நட்பு வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழாமினரால் அவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு, வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *