September 15, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா பயணமானார்!-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா பயணமானார்!-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் (Xi Jinping) முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நேற்று (12) பிற்பகல் பீஜிங் நோக்கிப் பயணமானார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக விவகாரங்கள் குறித்து முதன்மையாகப் பேசப்படவுள்ள போதிலும், தாம் ஈரான் விவகாரம் தொடர்பில் சீனத் தலைவருடன் ஒரு “நீண்ட கலந்துரையாடலை” (long talk) மேற்கொள்ளவுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் அணுவாயுதம் இருப்பதைத் தடுப்பதே தனது முக்கிய இலக்கு என்று தெரிவித்த அவர், ஈரானியர்கள் ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும் அல்லது முற்றாக அழிக்கப்பட (decimated) வேண்டும் என எச்சரித்துள்ளார்.

இந்த இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இன்று சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 106.95 டொலராகவும், அமெரிக்க டபிள்யூ.டி.ஐ (WTI) எண்ணெய் 101.52 டொலராகவும் பதிவாகியுள்ளது. ஈரானுடனான போர் நடவடிக்கைகளினால் கடந்த 74 நாட்களில் மட்டும் அமெரிக்காவிற்கு குறைந்தது 29 பில்லியன் டொலர் செலவு ஏற்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் உணவுப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக, புதிய காய்கறிகளின் விலைகள் கடந்த மூன்று மாதங்களில் 44 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஐநா பாதுகாப்புச் சபையின் வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 112 நாடுகள் தமது ஆதரவை வழங்கியுள்ளன. அத்துடன், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தலைமையிலான சர்வதேசப் பாதுகாப்புப் பணியில் இணைந்து, கண்காணிப்பு விமானங்களை வழங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் மார்ச் 2 ஆம் திகதி முதல் இதுவரை 2,883 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8,787 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தினகரன்