கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தினால் உடைத்தகற்றல் கட்டளை அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது
கட்டளைக்கு எதிராக 03 நாட்களுக்குள் அமைச்சின் செயலாளரிடம் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் அறிவிப்பு
பாறுக் ஷிஹான்
கரையோர வலயத்திற்குள் உரிய அனுமதியின்றிச் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள், வீடுகள், குடிசைகள் மற்றும் கொட்டகைகளை அறிவித்தல் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 07 நாட்களுக்குள் இடித்து அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் உத்தியோகபூர்வ கட்டளை பிறப்பித்துள்ளது.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ. டேர்னி பிரதீப் குமார அவர்களின் கையொப்பத்துடன் கூடிய உடைத்தகற்றல் கட்டளை அறிவித்தல், குறித்த அனுமதியற்ற கட்டுமானங்களில் கடந்த 2026.11.21ஆம் திகதி ஒட்டப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டின் 64ஆம் இலக்க மற்றும் 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்கச் சட்டங்களினால் திருத்தப்பட்ட 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவச் சட்டத்தின் 31(2)ஆம் பிரிவின் கீழ் இக்கட்டளை வழங்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட திகதியான 1983 ஒக்டோபர் 01ஆம் திகதிக்குப் பின்னர் எவரும் எவ்விதக் கட்டுமானத்தையும் அனுமதியின்றி அமைக்கக் கூடாது என அச்சட்டத்தின் 31(1)ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கட்டுமானங்களை அறிவித்தல் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 07 நாட்களுக்குள் உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இக்கட்டளையினால் பாதிக்கப்பட்ட எவரேனும் ஒருவர், அறிவித்தல் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 03 நாட்களுக்குள் இக்கட்டளைக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சின் செயலாளரிடம் மேன்முறையீடு செய்ய முடியும் எனச் சட்டத்தின் 31(3)ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள காலப்பகுதியில், அனுமதியின்றித் தொடர்ந்து கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதோ அல்லது வைத்திருப்பதோ சட்டவிரோதமானது என்பதுடன், அதனை மீறுபவர்கள் குற்றவாளிகளாவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அல்லது மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு செயலாளரினால் நிர்ணயிக்கப்படும் காலத்திற்குள் குறித்த கட்டுமானங்கள் அகற்றப்படாதிருப்பின், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகத்தினால் அவை இடித்து அகற்றப்படும். அவ்வாறு அகற்றுவதற்காகச் செலவிடப்படும் முழுத் தொகையும் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய கடனாகக் கருதப்பட்டு, அதன் உரிமையாளரிடமிருந்து அல்லது குடியிருப்பாளரிடமிருந்து சட்டரீதியாக அறவிடப்படும் எனவும் அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




