November 25, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > அஸ்வெசும கொடுப்பனவைப் பெற கல்முனையில் வங்கிக் கணக்குத் திறப்பதில் பயனாளிகள் பெரும் சிரமம்- கல்முனையில் வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட கணக்குத் திறப்பு நடவடிக்கைகளால் மக்கள் அசௌகரியம்

அஸ்வெசும கொடுப்பனவைப் பெற கல்முனையில் வங்கிக் கணக்குத் திறப்பதில் பயனாளிகள் பெரும் சிரமம்- கல்முனையில் வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட கணக்குத் திறப்பு நடவடிக்கைகளால் மக்கள் அசௌகரியம்

தற்போதைய அரசாங்கத்தின் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இதுவரை உள்வாங்கப்படாதவர்களைப் புதிதாக இணைத்துக்கொள்ளும் நோக்கில் மீள்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் (27.11.2026) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வங்கிக் கணக்குகள் இல்லாத பயனாளிகள் தங்களுக்கான வங்கிக் கணக்குகளைத் திறக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கல்முனைப் பிரதேசத்திலுள்ள அரச வங்கிகளுக்குப் புதிய கணக்குகளைத் திறக்கச் சென்ற பயனாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஒரு நாளில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான வங்கிக் கணக்குகளையே திறக்க முடியும் என வங்கிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகளவிலான பயனாளிகள் கணக்குகளைத் திறக்க வேண்டியுள்ள நிலையில், இந்த நடைமுறை பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளைப் பயனாளிகள் உரிய காலத்தில் பெற்றுக்கொள்வதற்கு வங்கிக் கணக்குத் திறப்பதில் நிலவும் தாமதம் தடையாக அமைந்துவிடக் கூடாது. இதனைக் கருத்திற்கொண்டு, புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்க வேண்டிய அனைவருக்கும் விரைவாகக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கான மாற்று ஏற்பாடுகளையும் விசேட நடவடிக்கைகளையும் வங்கி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நலன்புரிச் சலுகைகள், அரச வங்கிகளின் பணிச்சுமை மற்றும் நாளாந்த சேவை வரையறைகள் காரணமாகப் பயனாளிகளுக்குக் கிடைக்காமல் போவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கும் மக்கள், இந்த இக்கட்டான சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் வங்கித் தரப்பினரும் துரிதமாகத் தலையிட்டு, எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *