November 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவில் டெங்கு மரணம் பதிவு!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவில் டெங்கு மரணம் பதிவு!

(செல்வி வினாயகமூர்த்தி)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வாண்டின் முதலாவது டெங்கு மரணம் இன்று (24) பதிவாகியுள்ளதாக திருக்கோவில் பிரதேச பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உவைஸ் பாறுக் தெரிவித்தார்.

தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே டெங்கு காய்ச்சல் காரணமாக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இன்று (24) மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கைகளின்போது, தம்பிலுவில் பகுதியில் 370 வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 50 வீடுகளிலும், திருக்கோவில் பகுதியில் 200 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதில் 30 வீடுகளிலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாண மற்றும் கல்முனை பிராந்திய சுகாதாரத் துறை உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று திருக்கோவில் பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு, அதிகரித்து வரும் டெங்கு அபாயம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இந்நடவடிக்கையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் டாக்டர் சரவணபவன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஸஹூலா இஸ்ஸதீன், பிராந்திய தொற்றுநோய்ப் பிரிவுக்கான வைத்தியர் டாக்டர் எம்.ஜ. றிஸ்னிமுத், திருக்கோவில் பிரதேச பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உவைஸ் பாறுக், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ். சசிகுமார் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் நுளம்புக் கட்டுப்பாட்டு உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கமைய, நாளை (25) புதன்கிழமை முதல் திருக்கோவில் பிரதேசம் முழுவதும் புகை விசிறும் (Fogging) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை வாரத்திற்கு ஒருமுறையாவது பரிசோதித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன், நீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். நீர் தேங்கும் பாத்திரங்களை வெறுமனே காலி செய்யாமல், அவற்றின் உட்புறங்களையும் தேய்த்துச் சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களின் வளாகங்களையும் வாராந்தம் பரிசோதித்து நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்ற வேண்டும்.

காய்ச்சல், தலைவலி, உடல் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் அலட்சியப்படுத்தாமல் வைத்தியசாலையை நாடுவதுடன், கடுமையான வயிற்றுவலி, தொடர்ச்சியான வாந்தி, இரத்தப்போக்கு உள்ளிட்ட ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்
டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத்துறையினரின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டினதும் ஒவ்வொரு குடிமகனதும் பொறுப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *