November 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பொருளாதாரத் தன்னிறைவும் ஊர் நலனில் அக்கறையும் கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும்- ஏ.சி. யஹ்யாகான்

பொருளாதாரத் தன்னிறைவும் ஊர் நலனில் அக்கறையும் கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும்- ஏ.சி. யஹ்யாகான்

இளைஞர்கள் உயர்கல்வி மற்றும் சுயதொழில் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தல்

பாறுக் ஷிஹான்

பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்ற, பக்குவமான, ஊர் நலனில் அக்கறை கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் சேவைக்கு வர வேண்டும் என ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், யஹ்யாகான் பௌண்டேஷனின் ஸ்தாபகருமான அல்-ஹாஜ் ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிராந்தியங்களின் அரசியல் எதிர்காலம், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் நகர அபிவிருத்தி விவகாரங்கள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (23) இரவு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்

சாய்ந்தமருது தனிச் சபையாகப் பிரிக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பதில் சட்டச் சிக்கல்கள் எழலாம். எனினும், தேர்தல் நடத்தப்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் அணிகளைத் தயார்படுத்தும் பணிகளையே தாம் முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஊரில் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாதவர்கள் மாநகர சபை, நகர சபை எனப் பதவிகளைத் தேடி வருவதை மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களே சுயநலமின்றி மக்களுக்குச் சேவையாற்ற முடியும்.

மாநகர சபை மற்றும் நகர சபைகளின் நிர்வாகம், கழிவுநீர் வடிகால் திட்டங்கள் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் ஆகியவை திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து, கிடைக்கும் நிதியை உரிய முறையில் மக்களின் அன்றாடத் தேவைகளுக்காகச் செலவிட வேண்டும்.

இளைஞர்கள் குறுகியகால வருமானங்களை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், உயர்கல்வி, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் தொழில்முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். கல்வித் தகுதியும் சுயதொழில் திறனும் இருந்தால் எவரையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை வராது.

தற்போதைய அரசாங்கம் ஊழலைக் குறைப்பதற்கும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டத்தக்கது. அதேநேரம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் உள்ளூர் அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் மக்களே தெளிவான முடிவெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் வாக்குகளைப் பெற்றுப் பிரதிநிதிகளாக மாறியவர்கள் மக்களுக்கு உண்மையாகச் சேவையாற்றினார்களா, அவர்களுக்குத் தன்னிறைவான பின்புலம் உள்ளதா என்பதை ஆராய்ந்து, எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் மிகவும் பக்குவமாகவும் தெளிவாகவும் வாக்களிக்க வேண்டும் என அல்-ஹாஜ் ஏ.சி. யஹ்யாகான் மேலும் கேட்டுக்கொண்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *