November 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சிறப்பக்கட்டுரை – கிழக்கு மாகாணத்தைப் புரட்டியெடுத்து தாண்டவமாடிய சூறாவளி!! இன்று  48 வருடங்கள் பூர்த்தி – மறக்க முடியாத கருப்பு இரவு:1978.11.23 ம் திகதி

சிறப்பக்கட்டுரை – கிழக்கு மாகாணத்தைப் புரட்டியெடுத்து தாண்டவமாடிய சூறாவளி!! இன்று  48 வருடங்கள் பூர்த்தி – மறக்க முடியாத கருப்பு இரவு:1978.11.23 ம் திகதி

வி. ரி. சகாதேவராஜா

இலங்கை மக்கள் ஆயிரக்கணக்காக மரணித்த இயற்கைப் பேரவலங்களில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரவலம் முக்கிமானது. மற்றையது கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை புரட்டியெடுத்த சூறாவளி எனலாம்.

சுமார் ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியும் நுாற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தால் அள்ளுண்டு போய் காணாமல் போகவும் காரணமானது இந்த சூறாவளிப் பேரவலமாகும்.

கிழக்கு மக்கள் அன்று இரவு உறங்கச் சென்றபோது, மறுநாள் காலை தங்கள் ஊர் இப்படி மாறும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

1978 நவம்பர் 22ம் திகதி இரவு, மழை கொட்டத் தொடங்கியது. காற்று சிறிது சிறிதாக வலுக்கத் தொடங்கியது. நள்ளிரவு தாண்டியதும் அது சூறாவளியாக மாறியது. நவம்பர் 23ம் திகதி அதிகாலை, மட்டக்களப்பை கடுமையாக தாக்கிய அந்த சூறாவளி, கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.

இன்று(23) திங்கள் அந்த கொடூர நாள் நடந்து 48 ஆண்டுகள் ஆகின்றன.

வழக்கம் போல் அன்றைய பத்திரிகைகள் வானொலிகளில் சூறாவளி தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அந்தச் சூறாவளியின் கொடூர முகத்தை எச்சரிக்கை விட்ட அரசாங்கம் கூட எதிர்பார்க்கவில்லை.

வானமே நீருடன் கீழே விழுவது போல் பெய்த மழையுடன் சேர்ந்து 130 மைல் வேகத்தில் (கிட்டத்தட்ட 210 கி.மீ) சுழன்றடித்தது காற்று.

மக்கள் எதிர்பாராத நேரத்தில் வீட்டுக் கூரைகள் காற்றுடன் பறந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. சூறாவளி தாக்கி முடிந்து அமைதியான போது அந்தப் பிரதேசங்கள் எந்த ஒரு மரமும் இல்லாது வெட்ட வெளியாகக் காணப்பட்டன. மகாவலி கங்கை பெருக்கெடுத்து குடிமனைகளுக்குள் புகுந்தது. ஏராளமான கால்நடைகள் காணாமல் போயின. வெள்ளம் வற்றிய பின் கால்நடைகளில் பல மகாவலி கங்கை ஆறு மற்றும் ஏனைய சிறு கால்வாய்களின் அருகில் சரிந்து கிடந்திருந்த பாரிய மருதமரங்களின் கொப்புகளில் இறந்தவாறு தொங்கிக் கொண்டிருந்ததாக பலரும் அந்த நேரத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தனர்.

ஊ,,ஊஊஊ, என்ற சத்தத்துடன் 210 கி.மீ வேகத்தில் வீசிய பேய்க்காற்றைப் பற்றி அந் நேரத்தில் 70 வயதான ஒருவர் பத்திரிகையில் பேட்டி கொடுத்திருந்தார். தன் வாழ்நாளில் இப்படி ஒரு காற்று சத்தத்தையும் காற்றின் பயங்கரத்தையும் காணவில்லை என கூறியிருந்தார்.

கிட்டத்தட்ட கிழக்கு மாகாணத்தில் 3 லட்சம் பேர் வீடுகளை, சொத்துக்களை இழந்தார்கள். ஏராளமான தென்னந்தோட்டங்கள் தரைமடடமாக வெட்ட வெளியாக காட்சியளித்தன. கணக்கிடமுடியாத சொத்து அழிவு ஏற்பட்டது. கால்நடைகளில் 80 வீதமானவை உயிரிழந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகள் முழுமையாக நீரில் மூழ்கத் தொடங்கிய போது கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களை தேடித் தேடி பெற்றோர் கதறி அழுதார்கள் என பத்திரிகைகள் அந் நேரம் செய்திகள் வெளியிட்டன. 5 நாட்களின் பின் வெள்ளம் வடிந்த போது அழுகிய மனித, விலங்குகளின் சடலங்களால் பெரும் தொற்று நோய்த் தாக்கங்கள் ஏற்பட்டன. குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவியது. புயல் அடித்து ஒரு வாரம் கடந்த நிலையிலும் மீட்பு நடவடிக்கைகள் முடியாமல் இழுபட்டன.

குறித்த சூறாவளி வடக்கையும் தாக்கிய போதும் ஆகக் கூடுதலான சேதம் கிழக்கு மாகாணத்திலேயே அதுவும் மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதியிலேயே ஏற்பட்டது. கிழக்கு மாகாண சூறாவளியால் நிர்க்கதியானவர்களுக்கு தமது தொப்புள்கொடி உறவுகள் என்ற கரிசனையில் யாழ்ப்பாணத்தவர்கள் ஏராளமான பொருள், பண, சரீர உதவிகளை தாராளமாகச் செய்திருந்தார்கள். அந் நேரத்தில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் கிழக்கு மக்களுக்கு நிதி, பொருள் உதவிகளை செய்திருந்தார். அப்போதய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜேவர்த்தனா மட்டக்களப்புக்கு நேரடியாக விஜயம் செய்து சேதங்களைப் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

அந்த ஒரு இரவு கிழக்கை சின்னாபின்னமாக்கியது:

– சுமார் 915 முதல் 1000 பேர் வரை உயிரிழந்தனர்

– 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்

– 2,50,000 வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் சேதம்

– 240 பாடசாலை கட்டிடங்கள் தரைமட்டம்

– மட்டக்களப்பின் 31,500 ஏக்கர் தென்னந்தோப்பில் 28,000 ஏக்கர் அழிவு – அதாவது 90 வீதம்

– 11 நெல் களஞ்சியங்களில் 9 அழிவு

– மட்டக்களப்பு மீன்பிடி படகுகளில் 5இல் 1 பங்கு அழிவு

திருகோணமலை முதல் அறுகம்பை வரை, கல்முனை, காரைதீவு, நிந்தவூர், அக்கரைப்பற்று, காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா என கிழக்கு கரையோரம் முழுவதும் பாதிக்கப்பட்டது.

மனிதம் மரிக்கவில்லை

அழிவுக்கு மத்தியிலும் மனிதம் வாழ்ந்தது. மின்சாரம் இல்லாமல் இருட்டில் இருந்த மட்டக்களப்பு வைத்தியசாலையில், வைத்தியர்கள் வாளியில் தண்ணீர் சுமந்து மேல் மாடி நோயாளிகளுக்கு கொடுத்தனர்.

அதே நேரம், ஒரு சிங்கள உப பொலிஸ் பரிசோதகர் உயிரை பணயம் வைத்து மின் நிலையத்திற்கு ஓடிச் சென்று மின்சாரத்தை துண்டித்தார். இல்லாவிட்டால் அறுந்து விழுந்த மின் கம்பிகளால் இறப்பு இன்னும் அதிகமாகி இருக்கும் என்று அன்று பார்த்தவர்கள் இன்றும் சொல்கிறார்கள். 3d83

அன்று தப்பித்து நின்ற ஒரே கட்டிடம் மட்டக்களப்பு டச்சு கோட்டை மட்டும் தான்.

48 ஆண்டுகளுக்கு பின் நாம் கற்றது என்ன?

1978இல் நம்மிடம் முன் எச்சரிக்கை அமைப்பு இல்லை. சைரன் இல்லை. வானிலை அறிக்கையை உடனே மக்களுக்கு சொல்லும் வசதி இல்லை. அதனால் தான் இழப்பு அதிகம்.

இன்று நிலைமை மாறி உள்ளது. ஆனால் கிழக்கு இன்னும் சூறாவளி அபாயத்தில் தான் இருக்கிறது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் தான் நமக்கு மிகவும் ஆபத்தான மாதங்கள்.

அதனால் 1978ஐ நினைவு கூர்வது வெறும் அஞ்சலி செலுத்துவதற்காக மட்டும் அல்ல. இனி ஒரு 1978 வராமல் தடுக்க நாம் தயாராக இருக்கிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வதற்காகத்தான்.

எனது அனுபவம்;

1978 இல் சூறாவளி அன்று  எனக்கு வயது 14. நாங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தாவில் கற்ற காலம் .
அன்று (23.11.1978) இரவு  பூராவும் சிவானந்தா கமலாலயம் B விடுதியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு. …
மறுநாள் காலை அங்கிருந்து வீதிக்கு குறுக்காக கிடந்த மரம் தடிகள் மீது ஏறி இறங்கி இடையிடையேஇளநீரைக் குடித்துக் குடித்து நடந்து வந்து பாண்டிருப்பை அடைந்ததும் கும்மிருட்டாகிவிட்டது. நண்பன் பாலனின்( தற்போது அவுஸ்திரேலியா) வீட்டில் தங்கி மறுநாள் காலை காரைதீவை அடைந்தேன். என்னுடன் மலையக நண்பர்களான லுணுகல தியாக சுந்தரம்( தற்போது அதிபர்) பதுளை பாலசுப்ரமணியம்( தற்போது டாக்டர்) இருவரும் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் வரை எனது வீட்டில் தங்கி சென்றனர். வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் அது.

அன்று உயிர் நீத்த அனைவருக்கும் எங்கள் அஞ்சலிகள்.

விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர் 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *