November 26, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > ரியாத் நிதி மையம் மீது தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு சவூதி வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம்

ரியாத் நிதி மையம் மீது தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு சவூதி வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம்

தலைநகர் ரியாத்தில் உள்ள சிவில் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள், சிவில் இலக்குகள் ஆகியவற்றை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து நடத்தி வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், அதனால் மன்னர் அப்துல்லா நிதி மையத்தில் (King Abdullah Financial District) ஏற்பட்ட பொருட்சேதங்களுக்கும் சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு தனது கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

தனது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், தேசிய வளங்களைப் பேணுவதற்கும், தனது குடிமக்கள் மற்றும் நிலப்பரப்பில் வசிப்பவர்களின் பாதுகாப்பையும் நிம்மதியையும் உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் முழுமையானதும் நியாயமானதுமான உரிமை சவூதிக்கு உண்டு என்பதை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், சர்வதேச சட்ட விதிகளுக்கு இணங்க, தனது நிலப்பரப்பையும் வளங்களையும் இலக்கு வைக்கும் எந்தவொரு தாக்குதலின் விடயத்திலும் சவூதி அரேபியா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சர்வதேச சமூகத்தையும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளையும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுமாறும், தொடர்புடைய பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களைச் செயல்படுத்துமாறும் சவூதி அழைப்பு விடுக்கிறது. அத்துடன், சவூதி அரேபியாவுக்கு எதிராக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் கொடிய தாக்குதல்களையும், இக்கிளர்ச்சியாளர்கள் பிராந்திய மற்றும் உலகப் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலையும் கண்டிக்குமாறும் வலியுறுத்துகிறது.

(வை.அறபாத்)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *