அம்பாறையில் இராணுவ அதிகாரியையும் வேட்பாளராக களமிறக்கியுள்ள தமிழரசுக்கட்சி :காரைதீவில் ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பினார் சங்கு வேட்பாளர் புஸ்பராசா
தமிழரசுக்கட்சி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் கறி வேப்பிலையாகவே உபயோகித்து வருகின்றார்கள்.பல்வேறு இன்னல்களை மாற்று இனத்தவரால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றபோதும் அவற்றுக்கான எந்த தீர்வும் இல்லாமலேயே காலத்தை கடத்தியிருக்கின்றார்கள்.
தமிழரசுக்கட்சியினர் அம்பாறையில் ஆசனம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை தாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என இங்கு வாக்குகளை பிரிக்கின்றார்கள். வேட்பாளர்களை தேடிப்பிடித்து போட்டியிட வைத்துள்ளார்கள். இவர்கள் பேசுவதற்கும் செயலுக்கும் தொடர்பே இல்லை. தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இராணுவ அதிகாரி ஒருவரையும் வேட்பாளராக களம் இறக்கியுள்ளார்கள்.வீட்டு சின்னத்தில் போட்டியிடும் ஜனார்த்தனன் இவர் SLPC அதிபர் தரத்தில் உள்ளவர் கடற்படை மாணவர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று இராணுவ சீருடையில் பணிபுரிந்தவர். இவர் இராணு சீருடையுடன் எமது பிரதேசத்தில் வாகனத்தில் பயணித்தவர். இவ்வாறானவர்களை போட்டியிட வைக்கும் தமிழரசுக் கட்சி கூட பயணித்த போராட்ட இயக்கங்களை விமர்சிக்கின்றார்கள்
இவ்வாறு தெரிவித்தார் சங்கு சின்னத்தில் 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடம் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான சோ.புஸ்பராசா
காரைதீவு முன்னாள் பிரதேசசபை தவிசாளர் ஜீவராஜா தலைமையில் இடம் பெற்ற சங்கு சின்ன வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற இக் கூட்டத்தில் சக வேட்பாளர் எட்டாம் இலக்கத்தில் போட்டியிடும் சு.தவமணி, மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இவர்களின் செயலுக்கு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள்தான் உரிய பதிலை வழங்க வேண்டும். எமது மக்களை அழித்த பல்வேறு துன்பங்களை தமிழ் மக்களுக்கு புரிந்த அதே இராணுவ சீருடையில் தொழில் புரியும் ஒருவர் அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளர். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை மடையர்களாக்கும் தமிழரசுக்கட்சியினரை எமது மக்கள் இனியும் ஏமாற்ற இடமளிக்க கூடாது. தமிழரசுக்கட்சியை பிழையான வழியில் தற்போது வழிநடத்தும் தற்போதைய கூட்டத்திற்கு தகுந்த பாடம் வரும் 14 ஆம் திகதி மக்கள் வழங்கி. அதற்கு பின்னர் அந்த கட்சியை புனரமைப்பு செய்வோம்.
இந்த தமிழரசுக்கட்சியை எதிர்காலத்தில் சரியாக வழிநடத்தும் இளையவர்களிடம் கையளிப்போம். இந்த அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இவர்கள் செய்யும் துரோகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.