l

செல்லையா பேரின்பராசா 

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கல்வி சமூக பொருளாதார நிலைகளில் உயர்வடைய வேண்டுமாயின் இம் மக்களுக்கான முறையான அரசியல்  தலைமைத்துவம் தோற்றம் பெற வேண்டும் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் விட்ட தவறுகள் காரணமாக எமது மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது இந் நிலையில் இருந்து நாம் மீட்சிபெற வேண்டுமாயின் நாம் அனைவரும் எமது மக்கள் எதிர் கொள்ளும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் துணிந்து முகங்கொடுத்து சிறந்த தீர்வினைப் பெற்றுத் தரக்கூடிய ஆளுமைத் திறனும் அரசியல் ஞானமும் தெளிவும் உள்ள ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது எமது மக்களின் தலையாய கடமையாகும்.

இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடராசா ஜீவராசா குறிப்பிட்டார்.

ஜனனாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் திகாமடுள்ள தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆலையடிவேம்பில் 26.10.2024 இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடராசா ஜீவராசா அங்கு மேலும் பேசுகையில்.

கடந்த பொதுத் தேர்தல் இடம்பெற்ற போது தமிழர்கள் பல அணியினராக பிரிந்ததால் எமது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பறிபோன வரலாறு உண்டு இத்தகைய வரலாற்று தவறை இம்முறை எமது மக்கள் மேற்கொள்ளாமல் எமது மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்று மக்களுக்கு எதுவும் செய்யாத இலங்கைத் தமிழரசுக் கட்சியினரை விரட்டியடிக்க வேண்டும் அஃதே கடந்த காலங்களில் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் இருந்த வேளையில் அம்பாறை மாவட்ட தமிழர்களைப் பற்றி சிந்திக்காத வீணைச் சின்னக்காரர்களையும் படகுச் சின்னக்காரர்களையும் விரட்டியடிக்க வேண்டும் காரணம் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்காக உலாவரும் சில்லறை வியாபாரிகளே இவர்கள்.

காரைதீவு பிரதேச சபை நாவிதன்வெளி பிரதேச சபை என்பன 2006 இல் தோற்றம் பெற்ற போது நானும் நண்பர் புஸ்பராசாவும் இச் சபைகளின் முதலாவது தவிசாளர்களாகவிருந்து பாரிய பணிகளைச் செய்த வரலாறு உண்டு.

திகாமடுள்ள தேர்தல் மாவட்ட.த்தில் இம்முறை சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான நண்பர் புஸ்பராசா சிறந்த செயல் வீரன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் பேசவும் கூடிய புலமையாளர் இள வயதில் இன விடுதலைக்காக ஈரோஸ் அமைப்பின் மூலம் போராட்ட களம் சென்றவர் பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பியவர்.

போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில் பலரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாவிதன்வெளி பிரதேச சபையை வினைத்திறன் விளைதிறன் மிக்க சபையாக கொண்டு நடாத்திய வரலாற்று நாயகன். பின்னர் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அமோக வாக்குகளைப் பெற்று கிழக்கு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவானவர் இருப்பினும் இவருக்கு மாகாணசபை அமைச்சுப் பதவி வழங்காமை மாபெரும் துரோகத்தனமாகும் இருப்பினும் சகிப்புத் தன்மையுடன் எமது மக்களுக்கு சிறந்த சேவையை செய்தவர்.

பின்னர் அரசியலில் இருந்து சிலகாலம் ஒதுங்கியிருந்த இவர் பல தமிழ் அரசியல் வாதிகளால் வென்றெடுக்க முடியாமல் போன வட்டமடு மேச்சல் தரை காணிப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தவர்.இத்தரைக்கு உரித்தான 4800 ஏக்கர் நிலத்தை மீட்கவும் 269 பால் ண்ணையாளர்கள் பயன் பெறவும் 30 ஆயிரம் மாடுகளை பராமரிக்கும் தரையை பெற்றுக் கொடுப்பதற்காக இரண்டு தடவைகள் சிறைவாசம் அனுபவித்தவர் மேலும் நீதிமன்ற வழக்குகள் இரண்டை சந்தித்து நீதியைப் பெற்றுக் கொடுத்தவர் இவை யாவும் அரசியல் அதிகாரம் அற்ற நிலையில் இவர் செய்த பணியாகும்.

வெறுமனே வாய்ப் பேச்சில் மட்டும் வீரம் காட்டாமல் தொட்ட பணியை துலங்க வைத்த செயல் வீரனாவார் இந்த உண்மையை உணர்ந்து எமது மக்கள் நண்பர் புஸ்பராசாவை பாராளுமன்றம் அனுப்பி எமது இருப்பின் காவலரனை உறுதிப்படுத்துவோம் என்றார்.