மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தனின் மகள் நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தன் இறப்பதற்கு முன்னர் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளோம் என அவரது மகள் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராகி மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றி இருந்தார். எனினும் சம்பந்தன் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து இருக்க வாய்ப்பளித்தார்.
இதன்பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சம்பந்தன் தலைவராக இருக்கும் வரை அந்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சம்பந்தன் கடந்த ஜூலை 1ஆம் திகதி காலமான நிலையில், அவர் காலமாகி மூன்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.