சுந்தர் கல்முனை

2024 வாக்காளர் இடாப்பின்படி 5 இலட்சத்து 55 ஆயிரத்து 432 பேர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி 2020 வாக்காளர்களை விட இம்முறை 41453 வாக்காளர்கள் கூடியுள்ளனர்.

இன அடிப்படையில் நோக்கினால் கிட்டத்தட்ட 250,000 முஸ்லிம் வாக்காளர்களும், 205,000 சிங்கள வாக்காளர்களும், சுமார் 100,000 தமிழ் வாக்காளர்களும் தற்போது இங்கே உள்ளனர்.

சென்ற 2020 பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் 416574 ஆகும். இதன்படி போனஸ் ஆசனம் 01 போக முதல் சுற்றில் ஒரு ஆசனத்திற்கு 69429 வாக்குகள் தேவைப்பட்டன. இறுதிச் சுற்றில் 38911 பெற்ற குதிரைச் சின்னத்திற்கு 01 ஆசனம் கிடைத்தது. சுமார் 60000மேற்பட்ட வாக்குகளை தமிழ் வாக்காளர்கள் அளித்திருந்தும் இரு தமிழ் கட்சிகள் அவற்றை பங்கு போட்ட மையால் (கப்பல் 29379, வீடு 25255) துரதிஷ்டவசமாக தமிழ் பிரதிநிதிகள் எவரும் தெரிவாகவில்லை.

இம்முறை 2024 தேர்தலில் இங்கே 05க்கு மேற்பட்ட பிரதான தமிழ் கட்சிகள் போட்டியிடுவதாலும் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியினாலும் தமிழ் வாக்காளர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். பல தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்கவே தயக்கம் காட்டுவது போல் தெரிகிறது. இது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல.

உண்மையில் தமிழ் வாக்காளர்கள் அனைவரும் கட்சி விசுவாசத்திற்கு அப்பால் நின்று நுணுக்கமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இம்முறை பல்வேறு பிளவுகளின் காரணமாக தேசியப்பட்டியல் ஆசனம் எந்த தமிழ் கட்சிக்கும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே “தேசியப் பட்டியலுக்காக” என்ற நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை நிராகரிக்கலாம். பேரினக் கட்சிகளாலும் தமிழருக்கு ஆசனம் கிடைப்பது சந்தேகம்.

அம்பாறை மாவட்டத்தில் இரு தமிழ் கட்சிகளே தற்போது கூடுதல் தமிழ் வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. அதில் பெரும்பான்மையினர் சாயும் கட்சியின் பக்கம் அனைவரும் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும். இன்னுமொன்று, இனி கட்சிகளின் சீர்த்துவங்களை கைவிட்டு வேட்பாளரின் தகுதியை கவனித்து அனைத்து வாக்காளர்களும் அவருக்கு கட்சியின் ஊடாக வாக்களிக்க வேண்டும். ஆனால் தலைமைகளின் எதேச்சாதிகாரம் நிலவாத கட்சியாக அது இருக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்திலும் ஆசனம் கிடைக்காது மற்றும் தேசியப் பட்டியலிலும் ஆசனம் கிடைக்காது என தெளிவாகத் தெரியும் கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் “ஆற்றில் கரைத்த புளி போல்” வீணாகிவிடும். எனவே அக் கட்சிகள் சிறப்பாக இருந்தாலும் அவற்றுக்கு வாக்களித்தல் நல்லதல்ல.

கட்சிகளில் வெறுப்புக் கொண்டு வாக்களிக்காமல் விடுவது தவறான முடிவாகும். அது மற்றைய சமூகங்களுக்கு வாய்ப்பாக மாறிவிடும். மேலும் எல்லா சமூகத்திலும் இம்முறை கட்சிகளில் பிளவுகள் உள்ளமையால் இறுதிச் சுற்றில் வழமையை விட சற்று குறைவாக வாக்குகள் பெற்றாலும் ஆசனம் ஒன்று கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆகவே நம்பிக்கையுடன் அனைவரும் வாக்களிப்போம்.