அம்பாறை மாவட்ட தமிழ் மக்களிடம் வேட்பாளர் ஜெயசிறில் வேண்டுகோள்
( வி.ரி. சகாதேவராஜா)

இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களிடம் கன்னி உரையை நிகழ்த்தி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டை நிகழ்த்தி ஆசீர்வாதம் பெற்ற பின்னர் முதல் உரையினை அவரது இல்லத்தில் நிகழ்த்தியிருந்தார்.

உதிரஉறவுகளே என விழித்து அவ் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்

எதிர்வரும் 2024, நவம்பர்,14, ல் இடம்பெறும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர் தம் தாய்க்கட்சியான “இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி” வீட்டுச்சின்னத்தில் இல:5இல் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன் என்பதை சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அத்தனை தமிழ் கிராமங்களுக்கும் கடந்த காலங்களில் சென்று என்னால் முடிந்த சில வாழ்வாதார உதவிகளை செய்துள்ளேன் செய்தும்வருகின்றேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
குறிப்பாக வெள்ளம் கொரோனா போன்ற அனர்த்த காலங்களில்
எனது சேவையை முழுத் தமிழ் கிராமங்களுக்கும் முடிந்தவரை செய்துள்ளேன்.

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான நான் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக பணிபுரிந்த காலத்தில் காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட பல அபிவிருத்திப்பணிகளை முன்எடுத்திருந்தமை பற்றி மனச்சாட்சியுள்ள அனைவருக்கும் தெரியும்.
அதனைத்தாண்டி எனது உதிர உறவுகள் வதியும் எமது அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய தமிழ் ஊர்களிலும் போரினால் பாதிக்கப்பட்ட, வறுமையால் பாதிப்புற்ற, அனர்த்தங்களால் நலிவுற்ற, ஏழை குடும்பங்களுக்காக முடிந்த உதவிகளை வழங்கும் ஏழைகளின் தோழனாக உள்ளேன்.

தமிழின உரிமைக்காக உள்ளார்ந்தமாக நடைபெற்ற அத்தனை அகிம்சைரீதியிலான போராட்டங்களிலும் முன்னின்று உளப்பூர்வமாக பங்கேற்று உள்ளேன்.

தமிழ்த்தேசிய அரசியலில் என்றும் தடம்மாறாமல் பயணிக்கும் என்னை எதிர்வரும் (14/11/2024) ல் இடம்பெறும் பொதுத்தேர்தலில் மீண்டும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் ஒரு வெற்றி வேட்பாளராக நிறுத்தப்பட்ட அடியேனை உளமார ஆதரிப்பீர்கள் என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகமில்லை.

எனது சேவை மீண்டும் ஒரு அரசியல் அதிகாரத்துடன் தொடர உங்களின் வாக்குகளை உங்கள் தாய்க் கட்சியாம் இலங்கை தமிழரசுக் கட்சி சின்னமான வீட்டுக்கு நேரே புள்ளடி இடுவதுடன் எனது விருப்பு இலக்கமான ஐந்து (5) இலக்கத்துக்கு மேலே ஒரு புள்ளடி இட்டும் என்னைத் தெரிவு செய்யுமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறேன்.