தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் தொடர்பில் புதுடில்லி அவதானம் செல்லுத்தியுள்ளது.

பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவான பின் முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டதுடன், ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்திருந்தார்.

அரச தரப்பினருடான சந்திப்பில் இலங்கைக்கு தொடர்ந்து இந்தியா உதவிகளை வழங்கும் எனக் கூறியிருந்ததுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக கருதப்படும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதன் அவசியத்தையும் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்டிருந்த மக்கன் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, ”வடக்கு மக்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தையோ அல்லது அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை. அது அரசியல்வாதிகளின் கோரிக்கை மாத்திரமே. இந்த மக்களுக்கு தமது பொருளாதார நலன்கள் நிறைவேற வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.” எனக் கூறினார்.

ரில்வின் சில்வாவின் கருத்துக்கு வடக்கின் தலைமைகள் கடும் கண்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், இராஜதந்திர மட்டத்திலும் இந்தக் கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அநுரகுமாரவின் வெளிவிவகார கொள்கைகள் தொடர்பில் இலங்கையில் உள்ள இராஜதந்திரிகள் ஏற்கனவே, அவதானம் செலுத்தியுள்ள சூழலிலேயே தமிழ் மக்களுக்குத் தீர்வு அவசியமில்லை எனக் கூறப்படும் கருத்துகளும் வெளியாகி வருகின்றன.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் முக்கிய செயல்பாட்டாளர்களாக உள்ளவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளை் குறித்து புதுடில்லி கழுகுப்பார்வை செலுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரத்தில் அறிய முடிந்தது.

இதுதொடர்பில் மௌனம் காக்கும் இந்தியா, அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தமது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த உள்ளது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தம் தொடர்பில் நேரடியான கருத்துகளை ஜனாதிபதி வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும் புதுடில்லி தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரத்தில் அறிய முடிந்தது.

நன்றி -தினக்குரல்