தமிழர்களுடைய வாக்குகள் தமிழ் தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து!

பு.கஜிந்தன்

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றம் வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இளைஞர்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் திரு.சிந்துஜன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2010, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு என மூன்று பாராளுமன்ற தேர்தல்களை நாங்கள் யுத்தத்திற்கு பின்னர் எதிர் கொண்டிருந்தோம். அந்த மூன்று பாராளுமன்ற தேர்தல்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளும், கட்சிகளினுடைய ஏமாற்று வேலைகளும் மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மறுக்க முடியாது.

அந்தவகையில் இந்தமுறை வடக்கு – கிழக்கில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டுமென்ற அலை இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. தென் இலங்கையிலே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் வடக்கு – கிழக்கிலும் ஏற்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் நாங்கள் எங்களுடையவர்களையே தெரிவு செய்ய வேண்டும். அந்த மாற்றம் தென்னிலங்கை தரப்பை ஆதரிக்க கூடாது.

எங்களுடைய வடக்கு – கிழக்கு தமிழர்கள் தமிழ் தேசியம் என்ற ரீதியிலேயே நின்று, தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதையே நாங்கள் இந்த இடத்திலே கேட்டுக்கொள்கின்றோம். தென் இலங்கை தரப்புகளை புறக்கணித்து இந்த முறை தேர்தலிலும் எமது உரிமைகளை பறைசாற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

எங்களுடைய அரசியல் காட்சிகளும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களிலே, மக்களை எங்கே கொண்டு செல்கின்றீர்கள் ஒரு கொள்கை கூட உங்களிடம் இல்லை. யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களது அரசியல் தீர்வு குறித்து எந்த ஒரு கட்சியும் தீர்வு திட்டத்தை முன்னகர்த்திக்கொண்டு செல்லவில்லை என்பது மிகவும் ஒரு கவலைக்கிடமான, வெட்கப்பட வேண்டிய விடயம். 

இந்த நேரத்திலாவது தமிழ் மக்களாகிய நாங்கள் கடந்த காலத்தில் எம்மை ஏமாற்றி அரசியல் செய்தவர்களை புறக்கணித்துவிட்டு இம்முறை ஒரு சரியான தலைமைத்துவத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி எமது உரிமையை பறைசாற்ற வேண்டும் என இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றோம். 

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை தமிழ் தரப்புகளுக்கு அளிக்கப்பட வேண்டுமே தவிர மாறாக தென் இலங்கை தரப்பிற்கு அழைக்கக்கூடாது என்பதனையும் இந்த இடத்தில் நாங்கள் வலியுறுத்த விரும்புகின்றோம்.

நாங்கள் எப்போதுமே உரிமை அரசியலை வேண்டி நிற்கின்ற ஒரு சமூகம்.  உரிமை அரசியலுக்காக போராடுகின்ற ஒரு சமூகம். நாங்கள் உரிமை அரசியலை நிலைநாட்ட வேண்டும் என்றால் எங்களுடைய உரிமைக்கு குரல் கொடுக்கக்கூடிய அரசியல் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டுமே தவிர, காட்சிகள் மீதுள்ள விரக்தி மனநிலையால் தங்களது வாக்குகள் தென்னிலங்கை தரப்புக்கு சென்று விடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.