இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல்!
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிராளிகளாக, இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்போது, வழக்கை தொடர்ந்துள்ள மார்க்கண்டு நடராசா முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன,
1 முதல் 3 வரையான எதிராளிகள் 27.01.2024இற்குப் பின்னராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டியமையும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்புக்கு முரணானவை என்ற வகையில் வெற்றும் வெறிதானவையும் என்ற கட்டளைக்கும் தீர்ப்புக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், 1ஆம் மற்றும் 2ஆம் எதிராளிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் என்ற அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழ என்ற பெயரில் எவ்வித கூட்டங்களினையும் கூட்டக்கூடாது என்ற இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 1ஆம் எதிராளி இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என் கோதாவில் செயற்படக் கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2ஆம் எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற கோதாவில் செயற்படக் கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவினை பிறப்பிக்குமாறும் வழக்காளியின் சார்பில் வேண்டுதல் முன்வைக்கப்பட்டுள்ளது.