அம்பாறையில் ஆசனத்தை காப்பாற்ற நாங்கள் தயார் : முடிவு தமிழரசுக் கட்சியின் கையில் உள்ளது :தேசிய பட்டியலுக்காக வாக்குகளை சிதைக்க கூடாது

தமிழரசுக் கட்சியானது ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்படுத்தப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 
வவுனியாவில் நேற்று (05.10.2024) இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பொதுக்கட்டமைப்பானது தொடர்ந்தும் பணியாற்றும் என்பதை நாம் இரு தரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.
அந்தவகையில், இந்த நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பூடாக சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் அறிவிப்போம். நாங்கள் பிரிந்து நிற்பதால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடும் நிலை இருக்கிறது.

கடந்தமுறை அம்பாறையில் அந்த இடத்தை இழந்திருக்கின்றோம். எனவே, அங்கு தமிழ் பிரதிநித்துவத்தினை காப்பாற்றுவதற்கான இரண்டு வழிமுறைகளை தமிழரசுக் கட்சிக்கு கூறியிருக்கின்றோம்.
இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் ப.சத்தியலிங்கம் மற்றும் சி.சிறிதரன் ஆகியோருடன் நானும், செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தோம். எனவே, இருதரப்பும் இணைந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போதே அந்த பிரதிநித்துவம் காப்பாற்றப்படும்.

ஆகவே, ஏழாம் திகதிக்கு முன்னர் உத்தியோக பூர்வமான பதிலை அறிவுக்குமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். திருகோணமலையில் வீட்டு சின்னத்திலும், அம்பாறையில் சங்கு சின்னத்திலும் தேர்தலை கேட்கலாம் என நாம் முன்னர் பேசியிருந்தோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது அனைத்து இடங்களிலும் தமிழரசுகட்சி தனித்து போட்டியிடுவதாக கூறுகிறார்கள்.
அது நடந்தால் இந்த மாவட்டங்களின் ஆசனங்கள் இழக்கப்படும் நிலையே ஏற்படும். இந்த விடயங்களை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஐந்து கட்சிகள் மற்றும் 36ற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் ஒன்றுகூடி இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள். மாறாக எல்லா இடத்திலும் தாங்களே நிற்கவேண்டும் என்றால் இது பிடிவாதமே. தங்களுக்கு தேசியப் பட்டியலை கூட்டிக்கொள்வதே அவர்களது நோக்கம்.
ஒரு தேசிய பட்டியலுக்காக இரண்டு ஆசனங்களை இழக்கப் போகின்றார்கள். இதுபோல ஒரு முட்டாள்தனமான முடிவு எதுவும் இருக்காது. அத்துடன், சுமந்திரனுக்கு எவளவு தூரம் வடக்கு – கிழக்கு பிரச்சினைகள் புரியுமோ புரியாதோ என்று என்று எனக்கு தெரியாது. ஆனால் மாவை சேனாதிராஜா, சிறீதரன் ஆகியோர் இதனை புரிந்துகொள்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.