சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்ற கலந்துரையாடல் : அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு!
அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (03.10.2024) இடம் பெற்றது.
காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.
இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள் , அம்பாறை மாவட்ட நிலைமையில் ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்ததுடன், இன்றைய கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்தனர்.
கொள்கை அளவில் இணங்கிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
இன்றைய கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இ.விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் கண.வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..
இன்றைய கலந்துரையாடல் முதற்கட்ட வெற்றியாகும் . அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தமிழ் ஆசனத்தை காப்பாற்றும் வகையில் தமிழ் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசி வருகின்றோம். இன்றை அம்பாறைக்கான கலந்துரையாடலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள். முதற் கட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது . அடுத்து சின்னம், ஆசன பங்கீடு தொடர்பாக விரைந்து ஒரு கலந்துரையாடல் மூலம் ஒரு இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியில் எமது சிவில் சமூக கட்டமைப்பும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையும் செயற்பட்டுக்கொண்டிருக்டகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதால் மாவட்டத்தில் ஆசனம் இழக்கபடும் என்பதால் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் காரைதீவில் இடம் பெற்றது என்றனர்.
இங்கு பங்குபற்றிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தல் கூட்டில் தமிழ் தேசிய பரப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைக்க வேண்டாம் என தங்கள் கருத்தை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.














