தன்மானமுள்ள தமிழ் கட்சிகளிடம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் முன் வைக்கும் கோரிக்கை – கேதீஸ்
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கும், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலன் சார்ந்து சிந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் பதற்றமும், கவலையும் நிறைந்துள்ளமை வெளிப்படை.
இலங்கையில் ,அதிலும் வடக்கு கிழக்கில், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நிலை காலம் காலமாக பெரும் சாவாலகள் நிறைந்ததாகவே காணப்படுகிறன.
அரசியல் அநாதைகளாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்புக்களும், வளங்களும், சூறையாடப்பட்டுக்கொண்டே உள்ளதுடன், அடிப்படை உரிமைகளே திட்டமிடப்பட்டு தடுக்கப்படுவதும் யாவரும் அறிந்த விடயமே.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒரு சின்னத்தில் விட்டுக்கொடுப்புடன் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து பொதுவான இணக்கப்பாட்டுக்கு அம்பாறையில் போட்டியிட முண்டியடிக்கும் தமிழ் கட்சிகள் முன் வர வேண்டும்.
இங்கு சுமார் தொண்ணூராயிரம் வாக்குகள் உள்ளன. பல கட்சிகளாக தனித்தனியாக போட்டியிட்டு வாக்குகளை பிரித்து இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்பிருந்தும் எதுவும் கிடைக்காமல் செய்யும் அநீதியை தன்மானமுள்ள எந்த தமிழ் கட்சிகளும் செய்யாது என்ற நம்பிக்கை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மனங்களில் குறையவில்லை.
இங்கு அரச சேவையை பெறும் ஒரு நிருவாக பிரச்சனையே தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆளணி பௌதீக வளங்களுடன் தற்போது 29 கிராம சேவகர் பிரிவுகளுடன் இயங்கி வருகின்றது. இதற்கு ஒரு கணக்காளரை கூட நியமிக்க விடாமல் ஒரே மொழி பேசும் இனவாத அரசியல்வாதிகளால் தடுக்கப்பட்டு வருகின்றது என்றால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எந்தளவுக்கு அரசியல் அநாதைகளாக உள்ளார்கள் என்று விபரிக்க தேவையில்லை.
இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் உங்களுக்கான தேசியப்பட்டியலுக்கு வாக்குகளை பொறுக்கும் விளையாட்டு மைதானமாக அம்பாறை தமிழ் மக்களின் மார்புகளில் துள்ளிக் குதிக்காமல், தன்மானமுள்ள தமிழ் கட்சிகளாக விட்டுக்கொடுப்புடன் ஓரணியில் போட்டியிட வேண்டும் என்பதே எல்லோரினதும் அவாவாகும்.
குறுகிய நாட்களே உள்ளன. காலத்தை கடத்தாது தமிழ் கட்சிகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொது இணக்கப்பாட்டுடன் ஏதாவது ஒரு சின்னத்தில் போட்டியிட முன் வர வேண்டும்.
கட்சிகள் மக்களுடன் கலந்து பேசி ஒவ்வொரு கட்சியும் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களை களம் இறக்கினால், எமது ஆசனம் இரண்டு அல்லது ஒன்று பெறுவது உறுதி செய்யப்படும்.
நிறுத்தப்படும் போட்டியாளர்கள் அவர்களுக்குள்ள மக்கள் ஆதரவு தனிப்பட்ட விருப்பு வாக்குகளை பெற எடுக்கும் பிரசாரங்கள் முயற்சிகளின் அடிப்படையில் யாராவது நாடாளுமன்றுக்கு தெரிவாகுவார்கள்.
வென்றாலும் தோற்றாலும் போட்டியிடும் 10 பேரும் வெற்றிக்கு பங்குதாரர்களே. அனைவருக்கும் மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.
தற்போது அமைந்துள்ள அரசின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் செல்வாக்கினை பெற்றுள்ளது. அவ்வாறே அம்பாறை மாவட்டத்தில் தெரிவாகும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க ஆளும் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்பதும், காலத்துக்கு பொறுத்தமானது என்பதும் எல்லோர் மனங்களிலும் தினமும் நிகழும் நாடித் துடிப்பாகும்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு தன்மானமுள்ள தமிழ் கட்சிகளாக இருந்தால் அநீதி இழைக்காது என்று நம்புவோம். அவ்வாறு இல்லையேல் உரிய பதிலை மக்கள் வழங்குவார்கள்.