தமிழ் கட்சிகள் அனைத்தும் அம்பாரை மாவட்டத்தில் ஒரு குடையின் கீழ் வாருங்கள். இல்லையேல் நாங்கள்; விரும்பியவாறு செயற்படுவோம் என அம்பாரை மாவட்டத்தில் வாழும் தமிழ்மக்கள் வேண்டுகோள்
விடுக்கின்றனர்.


மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட பொதுச் சின்னம் ஒன்றே சாத்தியமான பாதை என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

கடந்தகால வரலாறுகள் இதற்கு சான்றாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். ஆகவே சகல கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை பங்கீடு செய்து ஒரு சின்னத்தில் போட்டியிட முன்வரவேண்டும்.
இதனை சகல கட்சிகளுக்கும் வலியுறுத்துவதற்கான கலந்துரையாடல்கள் ‘ அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு’ வினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


புதிய அரசாங்கம் நாட்டில் உருவாகியுள்ள நிலையில் ஒன்றாய் இணைந்து அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள தமிழ் பிரதிநிதித்துவம் என்பது அவசியம்.
இந்நிலையில் பல கட்சிகளும் பிரிந்து நின்று செயற்பட ஆயத்தமாகிவருகின்றனர்.

தங்களுக்கு விரும்பிய வேட்பாளர்களை களத்தில் இறக்கி வெற்றி பெறலாம் எனும் நம்பிக்கையுடன் செயற்பட்டுவருகின்றனர். ஆனாலும் அம்பாரை மாவட்டத்தை பொறுத்தவரையில் அது சாத்தியமற்றது என்பதை அனைவரும் அறிவோம்.


இதேநேரம் இத்தேர்தலில் இளைஞர்களை உள்ளடக்கிய புதியவர்களின் வருகையினை இளைஞர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அதிகளவான புத்திஜீவிகளும் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை கட்சிகள் கவனத்தில் கொள்ளாது விடின் அவர்கள் பெரும்பான்மை கட்சிகளை நோக்கி நகர்ந்துவிடுவர் என்பதையும் கட்சிகள் புரிந்து கொள்;ள வேண்டும்.


ஏனைய மாவட்டங்களை போலன்றி சுமார் 85000 ஆயிரம் தமிழர் வாக்கினை கொண்ட அம்பாரை மாவட்டத்தில் பிரிந்துநின்று வெற்றி பெறலாம் என்பது பகல் கனவே.

ஆகவே இதனை உணர்ந்து கட்சிகள் ஒன்றுபடவேண்டும். இல்லையேல் மக்கள் தக்க பதிலை வழங்குவர் என அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.