-கலாநிதி துரையப்பா பிரதீபன்-

கிழக்கு மாகாண வரலாற்றில் தனித்துவம்மிக்க ஆளுனராக ஊவா வெல்லஸப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பதவியேற்கிறார்.


பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள்,

கிழக்கு மண்ணின் மைந்தராக ,தமிழ் மொழியில் இவருக்குள்ள பாண்டித்தியம் மற்றும் அதிகளவான தமிழ் – முஸ்லிம் நண்பர்கள் வட்டம் என்பன , கிழக்கு மாகாண ஆளுனராக இருப்பதற்கான அதீத பொருத்தப்பாட்டைக் கொடுத்துள்ளதோடு , கிழக்கு மாகாண ஆளுனர் வரலாற்றில் அதிகூடிய கல்வித் தகைமை மற்றும் பேராசிரியர் தரத்துடன் நியமிக்கப்படும் முதல் ஆளுனராகவும் தனித்துவம் பெறுகிறார். தேசிய மக்கள் சக்தியின் தெரிவுகள் தனித்துவம் மிக்கதாகவும், இலங்கையின் புதிய யுகத்தின் பாதைக்குமான சமிக்ஞைகளைக் காட்டுகின்றன

பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் பற்றிய குறிப்பு


திருகோணமலை கந்தளாயை பிறப்பிடமாகவும் பூர்வீகமாகவும் கொண்டவர். ஆரம்பக் கல்வியை கந்தளாய் அக்ரபோதி வித்தியாலயத்தில் தொடர்ந்தவர், கொழும்பு நாலந்தா கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்தார். பாடசாலைக் காலம் முதல் விவாதம், பேச்சு, தலைமைத்துவம் என அனைத்திலும் பாண்டித்தியம் பெற்று பாடசாலைக்கு நற்பெயரைத் தேடிக்கொடுத்தவர்.

இயல்பாகவே இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்ரப்பட்டவர், ரஷ்யாவின் மொஸ்கோ பல்கலைக்கழகத்தின் கல்விக்கான புலமைப் பரிசிலின் மூலம் B.Sc in Chemistry, M.Sc. in Chemistry, PhD in Chemistry முதலான இளமானி மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளை நிறைவு செய்தவர்.

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக தனது கடமையை தொடர்ந்தவர், குறுகிய காலத்திலேயே துறைத் தலைவராகவும், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக இரு தடவையும் செயற்திறன் மிக்க கல்விசார் தலைமைத்துவத்தை வழங்கியவர்.

வாசிப்பிற்கும் எழுத்திற்கும் அதீத ஈடுபாட்டினைக் கொண்டவர், சுமார் 500 க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் சஞ்சிகைக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தாய் மொழிக்கு மேலதிகமாக ரஷ்ய மொழியில் பாண்டித்தியம் பெற்றவரான பேராசிரியர் அவர்கள் ரஷ்ய மொழியிலுள்ள சுமார் பத்திற்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகளை சிங்கள மொழியில் புத்தகமாகும் பிரசுரித்துள்ளார். அதற்காக சாகித்ய விருதினையும் பெற்றுள்ளார்.

ஆய்வுத் வெளியீட்டுத் துறையில் மிகவும் ஈடுபாடுகொண்டவர், சர்வதேச தரம் வாய்ந்த ஆய்விதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை. பிரசுரித்துள்ளார்.

கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் தர மேம்பாட்டிற்காக உலக வங்கியினால் இலங்கைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களிற்கிடையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின்கான பல வருடங்கள் பணிப்பாளராக கடமையாற்றியவர்.

பல நாடுகளில் தனது கல்விசார் நிபுணத்துவத்தினை வெளிப்படுத்தியவர், இந்தியா பங்களாதேஷ் முதலான நாடுகளின் மிகவும் பிரபல்யமான பல்கலைக்கழகங்களின் அழைப்பின்பேரில் நிபுணத்துவ ஆலோசினைகளை வழங்கியுள்ளார்.

சிறந்த பேச்சாற்றலும் , கருத்தரங்க வளவாளர் திறனும் கொண்டவர் , சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட கருத்தரங்கம் மற்றும் அமர்வுகளில் வளவாளராகவும் சிறப்பு பேச்சாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுளாளார்.

ஊவா வெல்லஸப் பல்கலைக்கழக உபவேந்தராக இரு தடவைகள் சிறந்த பணியாற்றியவர், இன்றுவரை மட்டக்களப்பு , புனானையிலுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக தனது செயற்திறன்மிக்க பணியைச் செய்துள்ளார்.

அவரின் தலைமைத்துவத்தில் சுமார் 06 வருட த்திற்கும் மேலாக ஒரே பல்கலைக்கழகத்தில் சிறுபான்மையினத்தவனாக பணியாற்றியவர் என்ற அடிப்படையில், கிழக்கு மாகாணத்திற்கு மிகவும் பொருத்தமானதும், தனித்துவமானதும், மூவின சமூகத்திற்கும் சமத்துவமானதுமான ஆளுனராக இருக்கக்கூடியவர்..

நன்றி

கலாநிதி துரையப்பா பிரதீபன்
25/09/2024