எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பதவியிலிருந்து நீங்கி விட்டதாகவும் தன்னிடம் இருந்த அரச வாகனங்கள் மற்றும் அலுவலகத்தை நேற்று (22) ஒப்படைத்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பொறுப்பில் இருந்த நிறுவனங்களை 2022 இல் இருந்த நிலையில் இருந்து மீட்டு வலுவான நிதி இருப்புடைய நிறுவனங்களாக மீள ஒப்படைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நான் அரசு வாகனங்கள் மற்றும் எனது அலுவலகத்தை நேற்றைய தினம் (22)மீள ஒப்படைத்துவிட்டேன். மேலும் எனது அமைச்சு பதவியிலிருந்தும் நீங்கிவிட்டேன். எனது நிர்வாகத்தின் கீழ் இருந்த நிறுவனங்களின் நிதி நிலைமை உறுதியாக இருக்கிறது.எரிசக்தி மற்றும் மின்சக்தி வழமை போல் இயங்குவதற்கு தேவையான பொருள் இருப்புகளும் இருக்கின்றன.
அனைத்து நிறுவனங்களிலும் இப்போது நேர்மறையான இருப்புநிலைக் குறிப்பு, அதன் சேவைகளுக்கான செலவு மீட்பு, விநியோகத்தர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துதல், நிலுவையில் உள்ள கடனைச் செலுத்துதல் போன்ற செயற்பாடுகள் முறையாக இடம்பெறுவதுடன் அந்த நிறுவனங்ளினால் கிடைக்கும் வருமானத்தில் அதிக வருமானத்தை திறைசேரிக்கு வழங்குகின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சக ஊழியர்கள், எனது குடும்பத்தினர், நண்பர்கள், அமைச்சு மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இராஜதந்திர பணிகள், மேம்பாட்டு முகாமைகள், பல்வேறு அரசு மற்றும் தனியார் பங்குதாரர்கள் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
2022இல் 4-13 மணி நேர மின்வெட்டு, எரிபொருள் இன்மை, நிலக்கரி இன்மை , பெட்ரோலியப் பொருட்கள் இன்மை , விநியோகஸ்தர்கள் இன்மை, பணமின்மை, வரையறுக்கப்பட்ட ஹைட்ரோ கொள்ளளவு ஆகிய நிலைமைகள் இருந்தன. ஆனால் அந்த நிலைமைகளை மாற்றி தடையில்லா எரிபொருள் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி, நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், ஹைட்ரோ கொள்ளளவு மற்றும் நிதி ரீதியாக வலுவாகவும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமளவுக்கும் நிறுவனங்களாக அவற்றை மீண்டும் ஒப்படைத்துள்ளேன். “ என்று தெரிவித்துள்ளார்.
நன்றி. தமிழன். Lk