விவசாயிகள் களப் பாடசாலையின் அறுவடை விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ரீ.பவிலேகா தலைமையில் பலாச்சோலை கிராமத்தில் விவசாயிகளுக்கான வயல் பாடசாலை அறுவடை விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு மு.பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் அத்துடன் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி நித்தியா நவரூபன், இவ் வயல் பாடசாலை திட்டத்தில் பெரிதும் அனுபவம் வாய்ந்த திருகோணமலை மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் திரு.சர்வேஷ்வரராசா, மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலக உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி சங்கீதா, பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்கள், தெற்கு வலய விரிவாக்கல் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நஞ்சற்ற இயற்கை வீட்டுத் தோட்டம் தொடர்பான களப்பாடசாலையில் 15 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிர்களின் விதைகள் உட்பட்ட உள்ளீடுகள் விவசாய திணைக்களத்தால் வழங்கப்பட்டு தொடர்ந்து 12 வாரங்கள் அவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிகள் விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டு செய்கை பண்ணப்பட்ட வீட்டுத் தோட்டத்தின் அறுவடை வெற்றிகரமாக நடைபெற்றது. இதன்போது விவசாயிகளில் கலை நிகழ்ச்சிகளும் அவர்களது திறமை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்பட்டுத்தும் விதமாக அரங்கேற்றப்பட்டன.




















