பொது வேட்பாளர் அரியநேத்திரனின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது !

தமிழ் தேசியப் பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03) வெளியிடப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடும் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் வெளியிடப்படது.

இந்நிகழ்வில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பொதுக்கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் 2024

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை

தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது. இப் போராட்டத்தின் ஒரு வழிமுறையாகத், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆகிய நாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பா. அரியநேத்திரன் அவர்கள் சங்குச் சின்னத்தின் கீழ் தமிழ்ப்பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது , தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பாகும்.

தமிழீழ விடுதலை இயக்கம் , தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் தமிழர்தாயகத்தைச் சேர்ந்த அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள்;, தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பே தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள மிகச்சிறு பகுதியினர் தவிர ஏனைய அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் இந்தக் கூட்டணி கடந்த 15 ஆண்டுகளில்; உருவாக்கப்பட்ட கூட்டணிகளில் ஒப்பீட்டளவில் பெரிய அணியாகும். இது தமிழ் ஒற்றுமையின் புதிய நம்பிக்கையாகவும் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கான பலமான அடித்தளமாகவும் எழுச்சி பெறும்.

ஈழத் தமிழர்களாகிய நாம் இலங்கைத் தீவில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய இனமாகவும், தேசமாகவும் வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசம் ஆவோம் இலங்கைத் தீவு பல்லின, பலமத, பல மொழி, பல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு தீவாகும். இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும் கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும். தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்கும் செயற்பாடுகளே இன அழிப்பாகும்.

தமிழர் தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழித்து பெரும்பான்மை இனத்துடன் அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள். அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக் கொடிய விளைவே இறுதிப் போரில் நிகழ்ந்த உச்சமான இன அழிப்பாகும்.

இந்தப் பின்னணியில் உலகின் மிகப்பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழக சட்டமன்றம் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றது. இன அழிப்பு என்று ஏகமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றியது. வடமாகாண சபை அதை இன அழிப்பு என்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனடாவில் பிரம்டன் நகர சபை அதை இன அழிப்பென்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனேடிய நாடாளுமன்றம் மே பதினெட்டினைத் தமிழ் இனப்படுகொலை நினைவுகூரல் நாளாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. பிரான்சில் உள்ள நான்கு மாநகர சபைகளான டீழடிபைலெஇளுநஎசயnஇஊhழளைல-டுந-சுழiஇஏவைசல-ளுரச-ளுநiநெ என்பன அது இன அழிப்பு என்று தீர்மானமாக நிறைவேற்றின. ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் சட்டசபையில்(ஊழபெசநளள) இந்த ஆண்டு மே15 அறிமுகப்படுத்தப்பட்ட 1230 தீர்மானமானது ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்டது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் பொருட்டு சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு அவசியம் என்பதை அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது.

எனினும், இன்றுவரை இன அழிப்புக்கு பரிகார நீதியும் கிடைக்கவில்லை; இன அழிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை. மாறாக,

தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையும் கோருவார்.

இந்த அடிப்படையில், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்துகின்றது.

1-இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2-தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் (Pடரசiயெவழையெட ளுவயவந) கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

3-ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது.

4-இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்.

5-தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது.

6-மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும்.

7-ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள்;, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஐநா பொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐநா பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.

8-அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும,; நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்.

இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும்.

9-ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ் மக்கள் இதுவே தமது பொது நிலைப்பாடு என்று உலகுக்கும் தென்னிலங்கைக்கும் வெளிக்காட்ட பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராகிய திரு.பா.அரியநேத்திரன் அவர்களுடைய சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.

பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும் தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்து நிற்பார்கள். அதாவது அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள்தான். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் கடமையாகும். சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய தமிழ் வாக்குகளை வழங்குவதன் மூலம் அன்பான தமிழ் மக்களே எங்களை நாங்களே வெற்றி பெற வைப்போம்.

தமிழ் வேட்ப்பாளர்