வாழை தாரை தலையில் சுமக்கும் எளிய மனிதனின் வலியை படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் மனதிற்குள் கடத்தி வலியை ஏற்படுத்துகிறார் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை விட மிகவும் நேர்த்தியாக அழகாக வாழையை செதுக்கியுள்ளார்.அவரது படைப்புகளில் நிச்சியம் இது வேறுபட்ட ஒன்றாக இருக்கும்.குறிப்பாக வாழையில் நிறைய அழகிய தருணங்கள் நிறைந்திருக்கிறது, ரஜினி கமல் வசனங்கள் என பல காட்சிகளில் கைத்தட்டி சிரிக்க வைக்கிறது, பள்ளி பருவ நினைவுகளை தூண்டுகிறது.

நமக்கு பிடித்த ஆசிரியரின் முகமாக நிகிலா விமல் தெரிகிறார்.அம்மா,அக்காவிற்கு இணையாக ஆசிரியர் மீதான அன்பை காட்சிபடுத்தியிருக்கும் விதம் அருமை.அதே நேரத்தில் கிராமத்து காதலையும் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் மூலமாக சொல்லி கிரங்கடித்துவிட்டார்.சிவனைந்தன் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் பொன்வேல் நடிப்பு எவ்வளவு பாராட்டினாலும் போதாது.பையன் கலக்கிட்டான்.சேகர் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் ராகுலும் ஸ்கோர் செய்துள்ளார்.அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜானகி இறுதிகாட்சியில் கலங்கடித்து விட்டார்.கலையரசன், திவ்யா துரைசாமி,பத்மன் என சக நடிகர்கள் அனைவரும் வாழைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

மயில் இறகாள் வருடுவது போல சந்தோஷ் நாரயணிண் பின்னணி இசை அமைந்துள்ளது.தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு புளியங்குளத்தையும் அந்த மக்களின் தவிப்பையும் இயல்பாக காட்சிபடுத்தியுள்ளது.

மொத்ததில் இந்த ‘வாழை’ மாரி செல்வராஜ் அனுபவத்த வலியின் சிறு பகுதி.சந்தோசமாக ஆரம்பித்து சிரிக்க வைத்து ரசிக்க வைத்து கடைசியில் கலங்க வைத்து கண்ணீர் வரவைக்கும் நிஜ சம்பவம்.