(அம்பாறை செய்தியாளர்)
கிழக்கு மாகாண கல்வித் துறையில் பாரிய அராஜகம் நடைபெறுகிறது; அநீதியான செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்முனையில் தெரிவிப்பு
கிழக்கு மாகாண கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் பாரிய அநீதிகள் தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வருகின்றன. இங்கு கல்வி துறையில் பாரிய அராஜகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்முனையில் வைத்து (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
முறையற்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கல்முனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வழக்கு மற்றும் நீதிக்கு புறம்பான மருதமுனை ஷம்ஸ் அதிபர் நியமனம் தொடர்பாக மன்றுக்கு வருகை தந்த போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின்,
கல்முனை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் (22) எடுக்கப்பட்டன. முறையற்ற ஆசிரிய இடமாற்றம், அநீதியான அதிபர் நியமனம் மற்றும் ஆசிரியர் இருவனால் போடப்பட்ட மேல்முறையீடு ஆகிய வழக்குகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கல்முனை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கிழக்கு மாகாண கல்வி துறை தொடர்பாக 14 வழக்குகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. ஏன் இந்த நிலை? சரியான நீதி இங்கு இல்லை. நீதி இல்லாத ஒரு மாகாணமாக கிழக்கு மாகாண கல்வித் துறை காணப்படுகிறது. நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று ஆசிரியர்களும் அதிபர்களும் நீதிமன்றத்திற்கு வர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உயர் பதவிகளில் உள்ள ஆளுநர், பிரதம செயலாளர், கல்விச் செயலாளர், பணிப்பாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் செயற்பாடு பிள்ளையானுக்கு அவசியமானதை செய்வது போல் தெரிகிறது. ஆசிரியர் இடமாற்றத்திற்கு ஒரு நாளைக்குள் விண்ணப்பம் கோரியமை சதி திட்டம் இல்லையா?
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் பாரிய முறைகேடுகள் இடம் பெற்றுள்ளது. இதற்கு யார் காரணம்? அதிபரின் கல்வி தகுதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய புள்ளி திட்டங்கள் சரியாக வழங்கப்படாமல் அவருடைய சிரேஷ்ட அதிபர் சேவை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த அதிபர் நியமனம் முறையாக நியமிக்கப்படவில்லை. இங்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. கல்வி பணிப்பாளர் நீதிமன்றம் வந்து அழுது வேலை இல்லை. நீதிமன்றத்திற்கு வழக்குகள் வந்ததும் தீர்வாக சமரசம் செய்வதும் கல்வி துறையில் பணியாற்றுபவர்கள் அதனை சமரசம் செய்ய முயற்சிப்பதும் வெட்கித் தலைகுனிவதும் கிழக்கு மாகாண கல்வி துறைக்கு கிடைத்த சாபக்கேடு ஆகும்.
கல்வி அதிகாரிகள் நீதியாக செயற்பட வேண்டும். 14 வழக்குகளையும் முன்னெடுப்பதற்கு குறித்த ஆசிரியர்கள் அதிபர்கள் எவ்வளவு செலவு செய்திருப்பார்கள். நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு இவர்கள் வராமல் எங்கு செல்வது?. இவர்களுடைய செலவுக்கு யார் பொறுப்பாவது? எங்களுக்கு நீதிதான் தேவை. அரசு அதிகாரிகள் அவர்களின் வாகனம், போக்குவரத்து, எரிபொருள் செலவு, சட்டத்தரணி கொடுப்பனவு என இவைகள் எல்லாம் அரசு செலவுகளில் தான் செய்யப்படுகிறது. இது யாருடைய நிதி? கிழக்கு மாகாண கல்வி துறையை நீதியான இடமாக மாற்ற வேண்டும். நாங்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு சொல்லுகிறோம் எந்த நாளும் நீதிமன்றத்திற்கு வர முடியாது. பல பிரச்சினைகள் இருக்கின்றன. நீதியான இடமாக இதை மாற்ற நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.
ஆளுநர் பிள்ளையானுக்கு பயப்படுகிறாரா? நீதியை கொடுக்க பயமா? கல்வித்துறை அதிகாரிகள் எதற்கு இருக்கிறார்கள்? அவர்கள் என்ன பொம்மைகளா? இடமாற்றங்கள், முறைகேடான கல்வித்துறை செயற்பாடுகளை கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நிறுத்த வேண்டும் நிறுத்தாத வரை இலங்கை அரசியல் சங்கம் போராடும். அநீதியான செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இதனை நாம் உறுதியாகச் சொல்கிறோம். கல்வி அதிகாரிகள் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நமது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம் என்று தெரிவித்தார்
இதன் போதும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டமட்ட இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.