.
பாறுக் ஷிஹான்
பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (24) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தெளிவூட்டும் துண்டு பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி வடக்கு – கிழக்கில் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை ஏற்க முடியாது என அம்பாறை – திருக்கோவில் பகுதியில் துண்டுபிரசூரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தரப்பினருக்கு எதிராக பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவில் பொறுப்பதிகாரி தேர்தலை புறக்கணிக்க கோருவது சட்டவிரோதம் எனவும் நல்லிணக்கத்தோடு உள்ள திருக்கோவில் பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.இதன்போது இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதற்கு பதிலளித்த, கஜேந்திரன் எம். பி தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே தாம் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.