களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் தகவல் (ஹோப்) நிலையம் திறந்து வைக்கப்பட்டது!


களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் நன்மை கருதி நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் (ஹோப்) கடந்த 19.08.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நோயாளருக்கான பாதுகாப்பு கலாச்சாரம் மற்றும் தகவல்கள், வழிகாட்டல், ஆலோசனைகள், அவசரசேவைகளை நோயாளருக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இரா.முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக அமைக்கப்பட்ட இந் நிலையமானது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இ.புவனேந்திரநாதனின் வழிகாட்டலில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிலையத்தை திறந்து வைத்து பிராந்திய பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் உரையாற்றுகையில்,

குறித்த ‘ஹோப்’ ‘நிலையமானது வைத்தியசாலையில் நோயாளர் மத்தியில் எழுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கின்ற நிலையமாக காணப்படுகிறது.


இந் நிலையத்தின் ஊடாக சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குகின்ற போது வைத்தியசாலையின் சேவைகளை புரிந்துகொண்டு வைத்தியசாலைமீது நம்பிக்கை வைத்து செயற்படுகின்றமைக்கு வழியமைக்கும்.


இது தவிர மக்களுக்கு வெளிச்சேவைகள் அதாவது, பிரதேச செயலகங்கள் ஊடாக கிடைக்கின்ற உதவிகள் மற்றும் நோயாளர்களுக்கு நன்கொடைகளை பெற்றுக்கொடுக்கின்ற சந்தாப்பங்களும் இந்த நிலையத்தால் செய்துமுடிக்ககூடியதாக இருக்கும்.

நோயாளர்களுக்கு தேவையான மேலதிக சேவைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்களையும் வழங்கும். இதனால் பொது மக்களுக்கும், வைத்தியசாலைகளுக்குமிடையில் நல்ல இணைப்பை ஏற்படுத்தும் என்றார்.

இந்த நல்ல விடயத்ததை முன்னெடுத்து வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் ,சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.