அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து விபரித்தார் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் கொழும்பில் சந்தித்தார்.
இச் சந்திப்பு தொடர்பாக கல்முனை நெற்றுக்கு மு.இராஸே;வரன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த சந்திப்பில் ஜனாதிபதியிடம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பாக பேசியிருந்தேன் . நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த போது கல்முனை வடக்கு கல்வி வலயம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதி பல முன்னெடுப்புக்களை செய்திருந்தேன் அதனை நிவர்த்தி செய்து தரவேண்டும் எனும் கோரிக்கையையும் ,அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி , காரைதீவு பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் விபரித்திருந்தேன்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பல்வேறு அடக்குமுறைகள், அரசியல் சூழ்ச்சிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நிலை பல சிக்கல்கள் நிறைந்தது, அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கால அரசியல் நகர்வை சிறந்த திட்டமிடலுடன் நகர்த்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்ற தேர்தல் , மாகாணசபை தேர்தல்களை எதிர்கொள்ளும் போது தமிழ் கட்சிகள் வாக்குகளை பிரிக்காது அனைவரும் தமிழரசுக்கட்சி உட்பட ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புடன் ஒரு சின்னத்தில் போட்டியிட்டு ஆசனங்களை பாதுகாக்க வேண்டும்.


நான் மாகாணசபை உறுப்பினராக இருந்த போது முடிந்தவரை பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளேன், ஆனால் ஏனயை மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான தேவைகள் ,பிரச்சனைகள், அபிவிருத்திகளுக்கு தற்போதுவரை தீர்வின்றியே உள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பில் பல விடயங்களை விபரித்திருந்தேன் சாதகமான பதிலை தந்தார் என்றார்.