எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.  இல்லையென்றால் கடந்த காலங்களில் போன்று மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், அடுத்த 10 வருடங்களுக்குள் ஏற்றுமதிசார் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைய முடியாவிடின் மீண்டும் எமது நாடு பொருளாதார சிக்கல்களுக்கு   முகம்கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஹட்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்பு எமது நாடு எப்படி இருந்தது என்பதை நான் புதிதாக கூறத்தேவையில்லை. இப்போது நாடு இயல்பு நிலைமைக்கு வந்துள்ளது. ஆனால் முழுமையாக நாம் மீளவில்லை.

உலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நாம் கடன்களை பெற்றோம். அவற்றை முறையாக திருப்பி செலுத்துவதற்கான நிபந்தனைகளை மிகவும் கவனமாக நிறைவேற்றினோம். அந்த நாடுகளுடனும் நாணய நிதிய அதிகாரிகளுடன் ஒப்பந்தங்கள் குறித்து மிகவும் சுமூகமாக கலந்தரையாடினோம்.

இந்த ஒப்பந்தங்களை நாம் கவனமாக கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் மேலும் உதவிகளைப் பெறலாம். ஆனால் அவற்றை மீறினால் எதிர்காலத்தில் எமக்கு எந்த வித உதவிகளும் கிடைக்கப்பெற மாட்டாது.

பாருங்கள் நாம் 17 தடவைகள் நாணய நிதிய ஒப்பந்தங்களை மீறியுள்ளோம். இனி அப்படி இடம்பெற்றால் எமது எந்த அனுதாபங்களையும் எவரும் காட்ட மாட்டார்கள்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதை விளங்கிக்கொள்ளாமல் அவற்றில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று பேசுகின்றனர். குறித்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமையவே நாம் பயணிக்க வேண்டியுள்ளோம். மீறினால் மீண்டும் வங்குரோத்து நிலைமைக்கே செல்ல வேண்டும்.

ஆகவே எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இங்கே எம்மத்தியில் உள்ள கேள்வி என்னவென்றால் கடின நிலைமையிலிருந்து மீண்ட நாம் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டுமா இல்லையென்றால் முன்னேற்றத்தை நோக்கி செல்லப்போகின்றோமா என்பது தான்.

You missed