திராய்க்கேணி குரூரப் படுகொலையின் 34 வது நினைவு தினம் இன்று
அம்பாறை மாவட்டத்திலே உலகறிந்த மிகவும் குரூரமான திராய்க்கேணி படுகொலைச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 34 வருடங்களாகின்றன.
1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 34வது வருட நினைவு தினம் இன்று (06.08.2024) ஆகும்.
சுற்றிவளைப்பின்போது திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 54 தமிழ் மக்கள் பால் வயது வித்தியாசமின்றி வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
மனிதாபிமானம் என்றால் என்ன விலை என்று கூறுமளற்கு 1990 காலகட்டத்தில் வகை தொகையின்றி தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்கள். இன்னும் அவற்றுக்கு நீதி கிடைக்க வில்லை என்பது அவர்களது ஆதங்கமாகும்.
இச் சம்பவம் பற்றி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கூறுகையில்…
இலங்கை நாட்டிலே சுதந்திரத்திற்கு பின்பு திட்டமிட்டவகையில் 1956 ,1985 ,1990,2009 வரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வந்திருக்கின்றார்கள்.
ஆனால் இதுவரை அப் படுகொலைகளுக்கு நீதியோ, நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை .
எந்த இனமாக இருந்தாலும் ஆலயம் என்பது புனித ஸ்தலமாக இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் இந்து ஆலயத்தில் தான் அதிகமான படுகொலைகள் இடம் பெற்று இருக்கின்றன. அரசாங்கமே ராணுவத்தையும், ஊர்காவல் படையினரையும் பயன்படுத்தி இந்த திட்டமிட்ட படுகொலையை செய்தது .
அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி மட்டும் அல்ல உடும்பன் குளத்திலே 151 விவசாயிகள் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதேபோன்று சொறிக்கல்முனையில் பங்குத்தந்தை செல்வராஜா பாதர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். வீரமுனையிலும் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்த வரலாற்றை எல்லாம் நாங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துசெல்ல வேண்டும். சமகால சந்ததியினர் சுதந்திரமாக நிம்மதியாக வாழ வேண்டும்.
மற்றுமொரு தமிழ் பற்றாளர் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கூறுகையில்..
அம்பாறை மாவட்டத்திலே 58 தமிழ்கிராமங்களை இலக்கு வைத்து இன அழிப்பு நடத்தப்பட்டது. ஆலங்குளம், மீனோடைக்கட்டு போன்ற கிராமங்கள் ஒரு தமிழர்களும் இல்லாமல் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் இனவாதிகள் இணைந்து செய்தார்கள் என்பது மாற்றுக் கருத்துக்களுக்கு இட இல்லை.
.எமது அடையாளத்தை நாங்கள் பேணவேண்டுமாக இருந்தால் அரசியல் ரீதியான தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் தொடர்ச்சியாக அமைதி வழி அறவழிப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதைத்தான் எமது கட்சியும் செய்து கொண்டிருக்கிறது. என்றார்.
படுகொலை சம்பவத்தில் கணவர்மாரை இழந்து விதவைகளானோர் 40 பேராவர்.
கண்முன்னே சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இரண்டு தாய்மார்களான அன்னம்மா, மாரிமுத்து மற்றும் கிராம தலைவர் சி.கார்த்திகேசு ஆகியோர் அழுது அழுதழுது கதைகூறினார்கள்.
இவர்களுக்கு நீதி கிடைக்குமா? நஷ்டஈடாவது கிடைக்குமா? என்று சர்வதேசமும் 34 வருடங்கள் காத்திருக்கிறார்கள்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்