கோரிக்கையை ஏற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும், சுதேச வைத்திய திணைக்களத்திற்கும் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையம் நன்றி தெரிவிப்பு!

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் அயராத முயற்சியின் பயனாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிருப்பில் ஆயர்வேத வைத்தியசாலை உருவாக்கப்பட்டிருந்தது.


இந்த வைத்தியசாலையின் பௌதீக வளத் தேவைகள் , மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்தல் தொடர்பாக கரிசனையுடன் பாண்டிருப்பு மறுமலச்சி சனசமூக நிலையம் செயற்பட்டதுடன் தேவைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலமும் நேரடியாகவும் தெரியப்படுத்தியிருந்தனர்.

வைத்தியசாலையின் பெயர்ப் பலகை சிதைவடைந்து பெயர் பலகை இல்லாமல் இருந்ததுடன் முக்கியமாக சுற்று மதில் இல்லாததால் வைத்தியசாலையில் பல சவால்கள் காணப்பட்டன. அத்துடன் வினைத்திறனான சேவை மக்களுக்கு கிடைப்பதிலும் சில குறைபாடுகள் காணப்பட்டன.


குறித்த விடயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த திருமதி முரளிதரன் அவர்களின் கவனத்திற்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தனர். அதன் பயனாக அவர்கள் நேரடி விஜயம் செய்து நிலைமைகளை பார்த்தறிந்திருந்ததுடன் RCC அமைப்பினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி இந்த வைத்தியசாலை தொடர்பாக அக்கறையுடன் செயற்படுவதற்கு பாராட்டியதுடன் குறிப்பிட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் குறைபாடுகளை தீர்த்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.

உறுதியளிக்கப்பட்டதற்கமைவாக பெண் வைத்தியர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.. பின்னர் திருமதி முரளிதரன் அவர்கள் மட்டக்களப்பு அரச அதிபராக கடமையை பொறுப்பெடுத்ததன் பின்னர் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையை பொறுப்பேற்ற எந்திரி திரு சிவலிங்கம் அவர்களுக்கும் ஏனைய தேவைகள் தொடர்பாக எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதன் பலனாக தற்போது பெயர்ப்பலகை மற்றும் சுற்றுமதில் அமைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


மக்கள் நலன் கருதி எமது கோரிக்கையை கவனத்தில் எடுத்து செயற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி முரளிதரன் அவர்களுக்கும், தற்போதைய செயலாளர் எந்திரி திரு சிவலிங்கம் அவர்களுக்கும் ,கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கும், அதன் அதிகாரிகளுக்கும் , கிழக்கு மாகாண ஆளுநருக்கும் தமது அமைப்பின் சார்பில் நன்றியை பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையம் தெரிவித்தனர்.

பாண்டிருப்பில் உள்ள மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட பாண்டிருப்பு சனசமூக நிலையம், பாண்டிருப்பு கிராமத்தின் வளர்ச்சி, பௌதீக வளங்கள் தொடர்பாக மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு பல ஆக்கபூர்வமான விடயங்களையும் முன்னெடுத்து வரும் அமைப்பாகும்.

குறிப்பாக பல சமூக சேவைகளை முன்னெடுத்திருந்தாலும், பாண்டிருப்பின் பௌதீக வளங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக பல முயற்சிகளை முன்னெடுத்து அமுல்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்டு கூறுவதாயின் பாண்டிருப்பு பொது நூலகம் நிரந்தர இடத்தில் அமைத்தமை, நூலக வளாகத்தில் சரஸ்வதி சிலையுடன் ,பூங்கா வசதியை ஏற்படுத்தியமை, அமரத்துவம் அடைந்தவர்களின் குடும்பங்களின் பங்களிப்புடன் பாண்டிருப்பு மயானத்திற்கு சுற்றுமதில் அமைக்கும் பணி என பல விடயங்களில் மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் பங்களிப்பு குறிப்பிட்டுக் கூறலாம்.