ஜி.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு.

தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தில் பொறுப்பற்ற வாய்வீச்சுகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவேட்பாளரைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும்,ஓரம் கட்ட வேண்டும் என்கின்ற பொறுப்பற்ற வெறுக்கத் தக்க வாய்வீச்சினைத் தவிர்க்க வேண்டும்.இப்படியான கருத்துகள் தாம் சார்ந்த கட்சியினைச் சிதைக்கின்ற செயற்பாடாகவே அமையும்.

சிங்களத் தேசியத்தின் தலைவர்கள் 75 ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளார்கள், தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இது வரலாறு தந்த பாடமாகும்.சந்திரிக்கா, மைத்திரி போன்று சிங்களத் தலைமைகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தோம். ஏமாற்றம் அடைந்தோம்.

நல்லாட்சிக் காலத்தில் தீர்வைப் பெறுவதற்கு முயற்சித்தோம்.தீர்வு இல்லையென்றால், அரசியலில் இருந்து விலகுவேன் என்று யாழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்,மிகையான நம்பிக்கையுடன் பேசினார்.எதுவும் நடக்கவில்லை.சிங்கள மக்கள் மத்தியில் சென்று அதே பாராளுமன்ற உறுப்பினர்,சமஷ்டியை நாம் கைவிட்டு விட்டோம்.13 வது திருத்தத்தில் சிறிய திருத்தம் செய்து தந்தால் போதும் என்று கெஞ்சும் பாணியில் பேசினார்.எதுவும் நடக்கவில்லை.
ஏக்கிய இராஜ்ஜிய
என்று அவர் பேசிய தீர்வுத்திட்டம் கிடைக்காமல் போனது.

தமிழர்கள்,தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒற்றுமைப்படுவது ஒரே குரலில் பேசுவது ஒரே தீர்வை முன்வைப்ப்பது ஆரோக்கியமானதாகும். அதனைத் தான்தோன்றித்தனமாக, மூர்க்கமாகப் எதிர்த்துப் பேசுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்தித்து,தமது கட்சியை உங்களுக்கே வாக்களிக்க வைப்போம் என்று திரைமறைவில் பேசிவிட்டு, பொதுவேட்பாளரைத் தோற்கடிப்போம் என்ற வார்த்தையில் ஆணவம் சுயநலம் தவிர வேறு ஒன்றுமில்லை.

கிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும்.தமிழ்த் தேசியக்கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியமானது. அந்த ஒற்றுமை மூலமாகவே திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும். மட்டக்களப்பிலும் மூன்று பிரதிநிதித்துவங்களையாவது பெற முடியும்.

அதனை விடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைச் சிதைக்கக் கூடிய தனிப்பட்டவர்களின் மூர்க்கமான பொறுப்பற்ற பேச்சுகள் தமிழர்களுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பாதகமாகவே அமையும்.

ஆகவே, தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அவரசப்பட்டு ஆத்திரப்பட்டு வெளியிடும் கருத்துகள் தமிழ்த்தேசிய அரசியலுக்கும், ஒற்றுமைக்கும் பாதகமாகவே அமையும். ‘தவளையும் தன் வாயால் கெடும்’ என்பது போன்ற வார்த்தைகளால் அவரவர் பாதிக்கப்படுவதில் பிரச்சினை இல்லை. ஆனால், தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் வடக்கு கிழக்கு வாக்குகளைச் சிதறடிக்க விரும்புவது அல்லது ஏமாற்றிக் கொண்டிருக்கும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது ஒரு வரலாற்றுத் தவறாகவே பதிவாகும்.

தனிப்பட்ட வாய்வீச்சாளர்களின் அரசியல் இன்றோ நாளையோ முடிவடையலாம். ஆனால், தமிழரசுக் கட்சியின் அரசியல் அவ்வாறு இருக்க முடியாது. பியசேனாக்கள் வியாழேந்திரன்கள் போன்றவர்களின் அரசியல் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டது.அது போன்றவர்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்குத் தேவையில்லை.

பொதுவேட்பாளரைத் தோற்கடிக்கும் அரசியல தமிழ்த் தேசியத்திற்குரியதல்ல. சிங்களத் தேசியவாதிகளுக்கு உரியதாகும்