அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம்.
சவாலைக் கண்டு ஒருபோதும் ஓடவில்லை.

வாய்ப் பேச்சை விடுத்து கடமையைச் செய்தேன்.
ஐ.எம்.எவ். உடன்பாடுகளுக்கு முரணாகச் செயற்பட முடியும் எனக் கூறுவது நாட்டுக்கு ஆபத்தாகும்.
சஜித், அநுரகுமார போன்றவர்களின் நிலைப்பாடு
என்ன?

கட்சிகளை உடைப்பது எனது நோக்கமல்ல.
பத்து வருடங்களில் இலங்கையைச் சிங்கப்பூர் போல் கட்டியெழுப்ப முடியும்.
‘வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதற்கான கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள் ளது.’

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

காலி நகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ கூட்டத்தில் உரை யாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சவால்களில் இருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பேசிகொண்டிருக்காமல் தனது கடமைகளை நிறைவேற்றுவதே தனது அரசியல் கொள்கை எனவும், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதா கவும் உறுதியளித்தார்.


பல அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், காலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களும் அரசின் எதிர்கால வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவிக்கும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் மேலும் உரையாற்றுகையில்,


‘காலி மாவட்டம் எனக்கு முக்கியமானது. எனது தந்தைவழிச் சமூகம் இங்கிருந்தே வருகின்றது. இந்த நகரத்தோடு அந்தத் தொடர்பு உள்ளது.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னதாக சிந்திக்க வேண்டியிருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதனை விடவும் சிந்திக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது.
2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை ஏற்க எவரும் இல்லாத நிலையிலேயே எனக்கு வழங்கப்பட்டது. தெற்காசியாவில் முதல் முறையாக பிரதமர் பதவி யாசகம் செய்தது.
நீங்கள் அடைந்த துயரங்களைக் கண்டுதான் பதவியை ஏற்றுக் கொண்டேன். உரம், எரிபொருள், எரிவாயு, பாடசாலை செல்லவும் வழியிருக்கவில்லை. நாட்டை ஏற்று இரு வருடங்களில் அந்த நிலையை மாற்றிக் காட்டினேன்.


நீண்ட நேரம் பேசுபவன் நான் அல்லன். ஒரு வேலையை ஏற்றுக்கொண்டால் அதனைச் செய்து முடிப்பேன். கஷ்டமான காலத்திலேயே நாட்டை ஏற்றேன். உணவைப் பெற்றுத்
தந்தோம். உரத்தைப் பெற்றுத் தந்தோம், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவாவிடம் உதவி கோரினேன். உலக வங்கியிடம் உதவி கோரினேன்.
ஜப்பானிடம் உதவி கோரினேன். இவ்வாறுதான் பயணத்தை முன்னெடுத்தேன்.
உதவியைப் பெற்றுக்கொண்டுதான் இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுத்தேன்.
6 மாதங்களில் இந்த நிலையை மாற்ற முடியும் என்று நம்பினேன். கடன் பெற முடியாத வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை குறைந்துள்ளது.


பல பிரச்சினைகள் இன்றும் உள்ளன. மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வங்கிகளில் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால், பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகளைவழங்கி வருகின்றோம். பொருளாதாரம் வலுவடையும் போது எமது கஷ்டங்களுக்கான தீர்வுகள் கிடைக்கும்.
அண்மையில் தங்க நகைகளுக்கான சலுகைகளை வழங்கியுள்ளோம். நாட்டு மக்களின் கஷ்டங்களைக் கண்டு கவலைப்படுகின்றோம். அதனை நிவர்திக்கு எம்மால் முடிந்த
அனைத்தையும் செய்வோம். சமுர்த்திக்கு மாறாக ‘அஸ்வெசும’ திட்டத்தில் மூன்று மடங்கு அதிகமாக நிவாரணம் வழங்குகின்றோம். பயனாளிகள் எண்ணிக்கையும் 24
இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசிலும் வழங்குகின்றோம்.
எந்த அரசிலும் காணி உறுதிகள் உங்களுக்கு கிடைக்கவில்லை. முடிந்த வகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம். தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள்
கிராமங்களாக மாற்றப்படும். பொது மக்களுக்கு உரிமை வழங்குவதே எனது நோக்கமாகும். அதனை கைவிடப் போவதில்லை. உங்களை செல்வந்தர்க்காக்கும் வரையில் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கிராமங்களில் வறுமையை போக்க விவசாய நவீனமயமாக்கலை செய்கின்றோம். நாட்டில் தற்போது நிலைத்தன்மை காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குவர ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளையர்கள், ரஸ்யர்கள்,இஸ்ரேலியர்கள், யுக்ரேனியர்கள் என பலரும் இலங்கைக்கு
இன்று சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் ஊடாக கிடைக்கும் வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள நாம் முயற்சிக்கவேண்டும்.


இவற்றுக்காக நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்பட வேண்டியது அவசியம். கடன் வழங்கிய நாடுகளின் நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டிய அவசியமும் உள்ளது. அவற்றை
சிதைத்துவிட்டு செல்ல முடியாது. அவ்வாறு செய்ய முடியும் என்று கூறினால் அது பொய்யானது. அவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றனர்.
அதனாலேயே எதிர்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறேன். எமக்கு இப்போது கிடைக்கும் நிதி கிடைக்காவிட்டால் மீண்டும் வரிசையில் நிற்கும் நிலை வரும். எனவே அரசியலுக்காக பொய்களைச்
சொல்லி நாட்டை மீண்டும் வீழ்த்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நாடு சரிவடைந்த பின்னர் அதனை ஏற்றுக் கொள்ளாமல் ஓட்டம் பிடித்துவிடுவார்கள். ஒலிம்பிக் வீரர்களையும் மிஞ்சி ஓடுவார்கள். அதனால் மேற்சொன்ன ஒப்பந்தங்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல கடமைபட்டுள்ளோம். இன்று ரூபா வலுவடைந்துள்ளது.

வட்டி வீதம் குறைகிறது. இந்தப் பயணத்தைத் தொடர்ந்தும் செல்வோம். எமக்கு மாற்றுத் தீர்வுகள்இல்லை. வேறு வழியிருந்தால் அதனையும் சொல்லுங்கள்.
பொய் சொல்லி காலம் கடத்தக்கூடாது. இப்போது உதவிகள்கிடைக்கின்றன. நாட்டை முன்னேற்ற வழி கிடைத்துள்ளது.


நாட்டு மக்களைப் போலவே இளையோரின் எதிர்காலம்பற்றியும் சிந்திக்க வேண்டும். இலட்சக்கணக்கில் இளையோர் நாட்டை விட்டுச் சென்றனர். அந்த நிலை மீண்டும்
வரக்கூடாது. நாம் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளின் நிலையை நாம்காண்கின்றோம். அவ்வாறு ஏன் எம்மால் வாழ முடியாது.


பொய்களை சொல்லிக்கொண்டிருந்தால்தான் இந்த நிலையில் இருக்கின்றோம். 2048 பற்றி நான் பேசிய போது எதிர் கட்சியினர் ஏளனமாக சிரித்தார்கள். ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் 2048 ஆம் ஆண்டிலேயே ஐம்பது வயதை
அடைவார்கள் என்பது எதிர்கட்சியினருக்கு விளங்கவில்லை.
நாட்டுக்கு இன்னும் பல முதலீடுகளை கொண்டு வரவேண்டும். தொழிற்சாலைகளைக் கொண்டு வர வேண்டும்.ஹோட்டல்களைக் கொண்டுவர வேண்டும். நாம் வலுவடைய
வேண்டியது அவசியம். இன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 85 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகின்றது. இந்தத்தசாப்தத்தின் இடைப்பகுதியில் அதனை 350 பில்லியன் டொலர்கள் வரையில் அதிகரிக்க வேண்டும். அதனை நான்கு
மடங்காக அதிகரிக்கும் இயலுமை எம்மிடம் உள்ளது. சீனா, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளால் முடியும் என்றால் எம்மாலும் செய்ய முடியும். இளையோரின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும். போராட்டங்களைச் செய்து கொண்டிருப்பதில் பயனில்லை. எதிர்காலத்தில் இளையோரே நாட்டை ஏற்கப் போகின்றார்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கேள்வியெழுப்ப அவர்களுக்கு உரிமை உள்ளது போலவே, அவர்களுக்கு பதிலளிக்க நாமும் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அவ்வாறான பயணத்தைச் செல்லவே இன்று நான் சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கியிருக்கின்றேன். பழைய அரசியல் முறையிலிருந்து நாம் விடுபட வேண்டும். நான் அமைச்சுக்களைப் பகிர்ந்தளித்தபோது அவர்களின் இயலுமையை அறிந்திருக்கவில்லை. ஆனால், திறமையாகச் செயற்படுவோர் இருக்கின்றனர் என்பது தெரிகின்றது. அரசியலைப் பற்றி சிந்திக்காமல் நாம் செயலாற்றுகின்றோம்.


அதனாலேயே நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்தது. புதிய முறையில் சிந்தித்து செயலாற்றினோம். நாட்டை நாம் பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்தைக் கட்டமைக்க
வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுடன் செயலாற்றக் கூடாது. சஜித் பிரேதமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க போன்றவர்களின் நிலைப்பாடு என்ன? கட்சிகளை உடைப்பது எனது நோக்கமல்ல. புதிய வகையில் சிந்தித்து அனைவரும்
ஒன்றுபட்டுச் செல்ல வேண்டும் என்றே கூறுகின்றேன். எமது இறுதிக் காலத்தில் அவற்றைச் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். நான், மஹிந்த ராஜபக் ஷ, கரு ஜயசூரிய, சந்திரிகா, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் அரசியலில்
இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கின்றோம். எனவே, முரண்பாடுகளை விடுத்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
முரண்பாடுகளை வளர்த்ததால்தான் இந்த நிலை வந்தது. இனியாவது முன்னோக்கிச் செல்வோம்.பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி புதிதாகச் சிந்திப்போம்.
10 வருடங்களில் இந்த நாட்டை சிங்கப்பூரைப் போல் கட்டியெழுப்ப முடியும். அதற்கான பயணத்தில் ஒன்றிணைந்து செல்வோம். நாட்டின் வெற்றியை உறுதி செய்வோம்!’ –
என்றார்.

நன்றி – முரசு