நாடறிந்த மூத்த கவிஞர் மு.சடாட்சரன் காலமானார்

ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் கிழக்கிலங்கையின் புகழ் பூத்த கவிஞர்களுள் ஒருவராக விளங்கிய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், கவிஞர்,கலாபூஷணம் மு.சடாட்சரன் இன்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.

கல்முனையை பிறப்பிடமாகவும், பெரியநீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

ஈழத்து கலை இலக்கிய பரப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மூத்த கவிஞர் மு.சடாட்சரன். புதிய பாதை எனும் கவிதை நூல் தொகுதியை வெளியிட்டவர். அனைவரது பாராட்டையும் பெற்றவர். கிழக்கின் கவிச்சக்கரவர்த்தியாக திகழ்ந்த மறைந்த கவிஞர் நீலாவணனின் பேரன்புக்கு பாத்திரமானவர். அவரது பாசறையில் வளர்ந்தவர். அன்று நீலாவணன் எழுதிய மழைக்கை எனும் நாடகத்தில் கர்ணனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். தனது வாழ்நாளில் பெரும் பகுதியை எழுத்து மற்றும் கலை இலக்கிய துறைக்காக அர்ப்பணித்தவர். இன்னும் இரு நூல்களை வெளியிட வேண்டும் என முனைப்புடன் செயற்பட்டுவந்தவர். அன்னாரின் இழப்பு ஈழத்து கலை இலக்கிய பரப்பில் பெரும் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது.

கவிஞரின் இறுதி ஊர்வலம் இன்று (07-07-2024) ஞாயிற்றுக்கிழமை பெரியநீலாவணையில் நடைபெறவுள்ளது.

இவர் கவிஞர் நீலா பாலன் ( கல்முனை பூபால் ) கவிஞர் கலைக் கொழுந்தன் ஆகியோரின் உறவினர் ஆவார்.